மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூம்புகார் விற்பனை கூடத்தில் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்ட சிமென்ட் சிற்பங்கள்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிமென்ட் மூலம் பல்வேறு சிற்பங்களை தத்துரூபமாக வடிவமைத்து அசத்தும் பூம்புகார் நிர்வாகத்தை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம், கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், கைவினை கலைஞர்களின் திறமையை மேம்படுத்த உரிய பயிற்சி அளித்து கைவினை கலைஞர்களுக்கு சமூக பொருளாதார பாதுகாப்பு அளித்தல் மற்றும் கைத்தொழில் கைவினை கலைஞர்களின் கலைப்படைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்தல் ஆகிய மேம்பாட்டு பணிகளை தனது முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் இசிஆர் சாலையொட்டி உள்ள பூம்புகார் விற்பனை கூடத்தில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், தமிழரின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் கடந்த சில மாதங்களாக (சுதை சிற்பம்) சிமென்ட் மூலம் கரகாட்டம் ஆடும் பொம்மை, ஏர் உழவன் பொம்மை, பழங்கால மரச்சக்கர மாட்டு வண்டி, ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், மான் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களின் மாதிரிகளை தத்ரூபமாக செய்து, வண்ணம் தீட்டப்பட்டு வந்தது.

தற்போது, அனைத்து பணிகளும் முழுமையாக முடிந்ததால், பூம்புகார் விற்பனை கூட நுழைவு வாயில் மற்றும் வளாகத்தில் பல இடங்களில் மாதிரி சிற்பங்கள் வைக்கப்பட்டு, பயணிகளின் பார்வைக்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது.  இது, உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், மாமல்லபுரம் வரும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஆர்வமாக வந்து பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த சிற்பங்களை வாங்கி செல்வார்கள் என பூம்புகார் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழரின் கலாச்சாரத்தை பறை சாற்றும் வகையில் பல்வேறு சிற்பங்களை செய்து காட்சிபடுத்தி உள்ள பூம்புகார் நிர்வாகத்தை உள்ளூர் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

The post மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூம்புகார் விற்பனை கூடத்தில் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்ட சிமென்ட் சிற்பங்கள் appeared first on Dinakaran.

Related Stories: