சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைந்தால் ஏற்படும் நன்மைகள்…! திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

நமது நாட்டின் தலைநகரமான டெல்லியில் உச்சநீதி மன்றம் இயங்கி வருகிறது. இதுதான் நாட்டின் முதன்மை நீதிமன்றம். இதன் கட்டுப்பாட்டின் கீழ்தான் அனைத்து மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றம்தான் அந்த மாநிலத்தின் உயரிய நீதி அமைப்பாக இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் சென்னையில் உயர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. அதன் கிளை நீதிமன்றம் மதுரையில் இயங்கி வருகிறது. சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட வழக்குகளில் ரூ.1 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றம் விசாரிக்கிறது. இதன் அதிகார எல்லைக்குள் புதுச்சேரி யூனியன் பகுதி நீதிமன்றங்களும் அடங்கும். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் அதிகார எல்லைக்குள் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களின் வழக்குகளை விசாரிக்கிறது. இது தவிர தமிழ்நாட்டில் சிறப்பு நீதிமன்றங்களையும் சேர்த்து 1288 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. அதில் சென்னை மாநகரில் 144 நீதிமன்றங்களும், இதர மாவட்டங்களில் 1144 நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன.

மேற்கண்ட நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. மதுரை உயர்நீதி மன்றக் கிளை தொடங்கிய பிறகு பெரும்பாலான வழக்குகள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்படுவதால், வழக்குகளுக்காக சென்னை வருகின்ற பொதுமக்களின் செலவு குறைகிறது. மேலும், நேரச் செலவும் இல்லை. இது தென் மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் உச்சநீதி மன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாநில நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் பேரில் மேல் முறையீடு செய்ய விரும்புவோர் டெல்லிக்கு சென்று உச்சநீதி மன்றத்தில் முறையிட வேண்டும். பெரும்பாலான வழக்குகளில், வசதி படைத்தவர்கள் மட்டுமே டெல்லி சென்று மேல் முறையீடு செய்யும் நிலை உள்ளது. ஏழை எளிய மக்களும் உச்சநீதி மன்றத்தின் பலனைப் பெற வேண்டும் என்று நோக்கில் சில ஆண்டுகளாக உச்சநீதி மன்றக்கிளையை மாநிலங்களில் ஏற்படுத்த அனைத்து மாநில மக்களும் கேட்டு வருகின்றனர். அதற்கு பெருத்த ஆதரவும் அதிகரித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னைக்கு வந்தால் நமக்கு என்ன நன்மை….?

இந்தியாவின் தென் மாநிலங்களில் வசிக்கும் மக்கள், புதுடெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம் செல்ல சுமார் 3000 கிமீ பயணம் செய்ய வேண்டும். போக்குவரத்து செலவு, ரயில் பயணச்சீட்டு பெறுவதில் சிக்கல் இருக்கிறது. அதைவிடக் கூடுதலான சிக்கல், ஓரிரு நாள்கள் டெல்லியில் தங்கி வழக்கறிஞர்களை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலையும் இருப்பதால், டெல்லியில் தங்கும் இடத்துக்கான செலவு, உணவு, உள்ளூர் போக்குவரத்து செலவு என பல சிரமங்களை சந்தித்தாக வேண்டும். பெரும்பணக்காரர்கள் மட்டுமே எளிதில் உச்சநீதிமன்றத்தை நாட முடியும் என்ற நிலை நெடுங்காலமாக உள்ளது. நியாயம் கேட்டு போராடும் சாமான்ய மக்கள் உச்ச நீதி மன்றத்தை கனவில் கூட பார்க்க முடியாது என்ற நிலையும் உள்ளது. டெல்லியில் உள்ள வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பழக்கமானவர்கள் என்ற காரணத்தால் அவர்களில் மிகுந்த செல்வாக்கு பெற்ற வழக்கறிஞர்களை நியமித்தால் தான் தனது வாதத்தை முன்வைக்க முடியும் என்ற கருத்து மக்களிடம் உள்ளது. அந்த வழக்கறிஞர்களுக்கு உரிய கட்டணத்தை அனைவராலும் செலுத்த முடியாது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக மொழிப் பிரச்னை பெரும் சவாலாக இருக்கிறது. இந்த தடைகளைத் தாண்டித்தான் பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தின் படிகளை மிதிக்க முடியும். இந்த தடைகளை உடைத்து, எளியவர்களுக்கும் நீதி கிடைக்கவும், எந்த அளவுக்கு மக்களுக்கு நெருக்கமாக்க இயலுமோ, அந்த அளவுக்கு நெருக்கமாக நீதிமன்றங்கள் அமைய வேண்டும் என்ற காரணத்தால் தான் உச்சநீதிமன்றக் கிளை தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக வைக்கப்பட்டு வருகிறது. தென்னகத்தில் உள்ள மக்கள் உச்சநீதிமன்றத்தை எந்த தயக்கமும் இல்லாமல் நாட முடியும். தென்னகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதிடும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். இதற்கெல்லாம் மேலாக வழக்கு தொடரும் நபர்கள் தங்கள் மொழியில் வழக்கு விவரங்களை பெறமுடியும் என்பதும் பெரும் வாய்ப்பாக உள்ளது.

ஒரு சிலர் கைப்பிடிக்குள் உள்ள வழக்காடும் வாய்ப்புகள் பரவலாக்கப்படும். சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை, மதுரையில் திறக்கப்பட்டதால் எப்படி தென் மாவட்ட மக்கள் பயனடைந்துள்ளனரோ, அதுபோல உச்சநீதிமன்றத்தின் கிளை தமிழ்நாட்டில் அமைந்தால் தென்னிந்திய மக்கள் பயன்பெறுவார்கள். புதுடெல்லியில் உச்ச நீதிமன்ற அமர்வு இருக்கும் என்று கூறும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 130, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் , வேறு எந்த இடத்திலும் அமர்வுகளை அமைக்க உச்ச நீதிமன்றத்தலைமை நீதிபதிக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. மக்கள்தொகைப் பெருக்கம், வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட புதிய சவால்களை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கிளை தென் மாநிலமான தமிழ்நாட்டில் அமைவது நீதிபரிபாலனம் செய்வதை எளிமையாக்கும்.

இதை கருத்தில் கொண்டு தான் திமுக தனது தேர்தல் அறிக்கையில் உச்சநீதிமன்றக் கிளை சென்னைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக 12வது சட்டக் கமிஷனின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், ‘சட்டக் கமிஷன் அறிக்கை எண் 230, தேதி 5.8.2009ல் தெரிவிக்கும் போது, உச்சநீதி மன்றத்தின் கிளைகளை பிற வரையறுக்கப்பட்ட இடங்களில் அமைக்கலாம் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 130ல் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க திமுக வலியுறுத்தும் என்று, தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது சாத்தியமாவதற்கான காலம் தற்போது நெருங்கி வருகிறது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் பயன்தரும் என்று எதிர்பார்க்கலாம்.

The post சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைந்தால் ஏற்படும் நன்மைகள்…! திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: