பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44 பேர் பாஜ எம்பிக்கள்: மோடிக்கு கனிமொழி பதிலடி

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதி மணியை ஆதரித்து கிருஷ்ணராயபுரத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த தேர்தல் என்பது வெறும் அரசியல் வெற்றிக்கான தேர்தல் இல்லை. இந்த நாட்டை மீட்டெடுக்க கூடிய தேர்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு மோடி ஆட்சி இன்றைக்கு நாட்டை சிதைத்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மக்களிடையே மதத்தின் பேரில் சாதியின் பேரில் பிரச்னையை உருவாக்கி வருகின்றனர். உலகம் சுற்றும் பிரதமர் தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கூட பார்க்க வரவில்லை.

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தமிழகத்திலே 7 நாட்கள் சுற்றி சுற்றி வருகின்றார். தந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. பாஜவில் தலைவர்களுக்கு முன்பு பிரதமர் பேசும்போது பெண்கள் சக்தி, பெண்கள் சக்தி, பராத் மாதாகி ஜே என்று பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்து இருக்க கூடிய 44 பேர் எம்பியாக உள்ளனர். அதில் பிரிஜ் பூசன் எம்பி மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர். அவருக்கு எதிராக வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பாஜ ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரத்தின் வழியாக நடந்துள்ளது. எனவே இந்த தேர்தலில் சகோதரர், சகோதரிகள் பாஜவிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44 பேர் பாஜ எம்பிக்கள்: மோடிக்கு கனிமொழி பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: