பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷா 4ம் தேதி தமிழகம் வருகை: 2 நாள் பிரசாரம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே தமிழகத்திற்கு படையெடுப்பதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருந்தார். அதாவது 5 முறை அவர் தமிழகம் வந்தார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய நகரங்களில் நடந்த பாஜ பொதுக்கூட்டங்களில் பேசினார். ரோடு ஷோவிலும் பங்கேற்றார். இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவும் வருகிற 4ம் தேதி தமிழகம் வருகிறார். அன்று, அவர் கோவை, மதுரை, சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜ மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

மறுநாள் 5ம் தேதி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வினோஜ் பி.செல்வம், தென்சென்னையில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னை தொகுதியில் ேபாட்டியிடும் பால்கனகராஜ் ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. பிரதமர் மோடியும் ஏப்ரலில் 3 தடவை தமிழகம் வர உள்ளதாகவும் டெல்டா பகுதிகள் மற்றும் வேலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒன்றிய அமைச்சர்கள் 18 பேர் தமிழகம் முழுவதும் வந்து பிரசாரம் செய்ய உள்ளனர். தேர்தல் பிரசாரத்திற்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா முதல் அத்தனை அமைச்சர்களும் வரிந்து கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

The post பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷா 4ம் தேதி தமிழகம் வருகை: 2 நாள் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: