திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: சிசிடிவியில் பார்த்தவுடன் வனத்துறை `அலர்ட்’

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் நள்ளிரவு சிறுத்தை நடமாடிய காட்சிகள் சிசிடிவியில் பதிவானது. இதைக்கண்டவுடன் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாசலம் மலைத்தொடரில் சிறுத்தை, கரடி, ஓநாய், யானைகள், புள்ளிமான்கள் மற்றும் ஏராளமான மலைப்பாம்புகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது பக்தர்கள் நடந்துசெல்லும் மலைப்பாதை வழியாக கடந்து செல்வது வழக்கம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த 6 வயது சிறுமியை சிறுத்தை கவ்சிச்சென்று வனப்பகுதியில் கொன்று வீசியது. இந்த சம்பவத்தையடுத்து தேவஸ்தான வனத்துறை, மாநில வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து கூண்டு வைத்து அடுத்தடுத்து 6 சிறுத்தைகளை பிடித்தனர்.

இதில் சில வாரங்களுக்கு முன்பு சிறுமியை தாக்கிய சிறுத்தையை அடையாளம் காணப்பட்டது. அந்த சிறுத்தையை மட்டும் திருப்பதி வன உயிரியல் பூங்காவில் அடைத்துவிட்டு மற்ற 5 சிறுத்தைகளை நல்லமல்லா மலைத்தொடரில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுசென்று விடப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் நரசிம்ம சுவாமி கோயில் அருகே உள்ள பக்தர்கள் நடைபாதை வழியாக சிறுத்தை நடமாடியுள்ளது. இந்த காட்சி அங்குள்ள வனத்துறைக்கு சொந்தமான சிசிடிவி கேமராவில் துல்லியமாக பதிவாகியுள்ளது. உடனடியாக திருப்பதி மலையேறும் பக்தர்களுக்கு மைக் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பக்தர்கள் அனைவரும் கையில் மூங்கில் கம்புகளை கொண்டு செல்லவேண்டும் என்றும், கூட்டமாக நடந்து செல்லவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூர படிக்கட்டுக்கு ஒரு வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பக்தர்கள் நடந்து செல்லும் பாதை அருகே சிறுத்தை நடமாடியுள்ளது. இதனை சிசிடிவியில் பார்த்தவுடன் பக்தர்களுக்கு உடனடியாக எச்சரிக்கை விடுக்க தொடங்கினோம். கூட்டமாக மலைப்பாதையில் செல்ல பக்தர்களுக்கு அறிவுறுத்தி மூங்கில் கம்புகளை கொடுத்து வருகிறோம். சிறுவர், சிறுமிகள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு கூறினர்.

The post திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: சிசிடிவியில் பார்த்தவுடன் வனத்துறை `அலர்ட்’ appeared first on Dinakaran.

Related Stories: