ங போல் வளை

நன்றி குங்குமம் டாக்டர்

யோகம் அறிவோம்!

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

மூன்று முடிச்சு

ஒவ்வொரு நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மனிதர்களின் தன்மை, குணம், நலம், தேவை ஆகியவை மாறிக்கொண்டே வந்திருக்கிறது. நமது முந்தைய தலைமுறையில் யோகம் பற்றி இவ்வளவு விழிப்புணர்வோ உரையாடல்களோ நடந்திருக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அது ஒரு குறிப்பிட்ட குழுவுக்குள் மட்டுமே நிகழ்ந்திருக்க முடியும். ஏனெனில் அன்றைய தேவை வேறொன்றாக இருந்திருக்கிறது.

உதாரணமாக, நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர்கூட நம் முந்தைய தலைமுறையினர் இவ்வளவு விஷயங்களை நுகர்ந்ததில்லை. உணவு, உடை, இருப்பிடம், வசதிகள், எண்ணங்கள், தகவல்கள் என அனைத்திலும் அவர்களைவிட நாம் பல மடங்கு அதிகமாக நுகரத் தொடங்கி இருக்கிறோம். இது மனிதப் பரிணாம வளர்ச்சி நமக்குத் தந்த அபரிமிதமான வாய்ப்பு. ஆகவே இவற்றை அனுபவிக்காமல் இருப்பதோ, விலக்குவதோ, தேவையில்லை. ஆனால், இவை அனைத்தையும் நுகரும்பொழுதே கவனிக்க வேண்டிய ஒன்று நுகர்ந்த அனைத்தும் செரிமானம் செய்யப்படுகிறதா?

என்பதே.யோக மரபில் செரிமானம் என்பது நாம் உண்பதைச் செரித்து மீண்டும் பசியைத் தூண்டுவது மட்டுமல்ல. உண்ட உணவு நம்முள் என்னவாக மாறியது? ஆற்றலாகவா? செரிக்காத விஷமாகவா? என்று கவனிப்பதும்தான். அதே போல, ஐந்து புலன்கள் வழியாக அனுபவித்த, நுகர்ந்த, அள்ளிச்சேர்த்த, அனைத்தையும் நாம் சரியாக செரித்துவிட்டோமா அல்லது அவை வெற்றுத் தகவல்கள், ஆணவங்கள், கோபங்கள், கழிவுகள் , விஷ வாயுக்கள் என நம்முள் தங்கியுள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

செரிமானம் என்பது , நுகர்ந்ததை அரைத்தல், அதிலிருக்கும் போஷாக்கைச் சேமித்தல், தேவையற்ற கழிவுகளை நீக்குதல் என்கிற மூன்றும் இணைந்த செயல்பாடு, இது உணவுக்கு மட்டுமல்ல, நாம் சேகரிக்கும் தகவல்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், நினைவுகளுக்கும்கூட இதுவே நிகழ வேண்டும். நாம் முன்னரே ஒரு முறை சொன்ன தகவல்களால் நிரம்பும் மூளை அடையக்கூடிய சோர்வு பற்றி பேசியது நினைவிலிருக்கலாம்.

யோகமரபு இதை வேறு வகையில் கையாள்கிறது. உதாரணமாக, பிராணன் தடைபடும் இடங்கள் அதனால் நிகழும் எதிர்வினை மாற்றகள் என ஒரு பார்வையை முன் வைக்கிறது. அதில் முக்கியமானது, ‘க்ரந்திகள்’ எனப்படும் நம்முள் இருக்கும் மூன்று முக்கிய தடைகள் அல்லது முடிச்சுகள். இவை பல்வேறு உடல் மற்றும் உயிரியல், ஓட்டங்கள் ஒன்று கூடும் ‘சந்திப்பு மையங்கள்’. இவற்றின் வழியாக பிராணன் எனும் உயிராற்றல் பாய்ந்து சென்று இங்கிருக்கும் கட்டுகளை, தடைகளை விடுவிக்காத பொழுது மனிதன் ஆற்றலை இழக்கிறான். பல்வேறு நோய்க்கூறுகளுக்கும் மனக்கிலேசங்களுக்கும் ஆளாகிறான்.

இந்த ‘முனைகள்’ முறையே ப்ரஹ்ம-க்ரந்தி, விஷ்ணு-க்ரந்தி, ருத்ர- க்ரந்தி எனப்படுகிறது. இதில் ப்ரஹ்ம க்ரந்தியின் இருப்பிடமாக, அடிவயிற்றுப் பகுதி முதல் தொப்புள் பகுதி வரை குறிக்கப்படுகிறது. இந்த ‘முனை’ நமது உடல் மட்டும் சித்தத்தின் அனைத்து பகுதிகளோடும் இணைக்கப்பட்டுள்ளது. நம்முடைய படைப்பாற்றல் பகுதியாகவும், அதே நேரத்தில் , உயிரச்சம் , உணவு, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் சார்ந்த பதற்றமும் உறையும் பகுதியாகவும் உருவகிக்கப்படுகிறது.

ஆகவே, இந்த ‘‘முடிச்சு” பிராணனின் உதவியுடன் அவிழ்க்கப்படாதபோது, படைப்பாற்றலோ, உயிராற்றலோ முழுமையாக இயங்க முடியாது. இது முதல் தேக்க நிலை. ஒரு சாதகன் தன் தீவிர சாதனையால் திறக்க வேண்டிய முதல் கதவாக சொல்லப்படுகிறது. இரண்டாவதாக , ‘விஷ்ணு-க்ரந்தி’ இது வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உள்ள பகுதியில் இருக்கும் முடிச்சாக உருவகிக்கப்படுகிறது. தன்முனைப்பும், சுயத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்தும் மையமாகவும், தீவிரமான பற்றை உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது. ப்ரம்ம க்ரந்தியில் படைப்பாற்றல் தடைபடுவது போல, விஷ்ணு க்ரந்தியில் நமது ஆற்றலும் நிர்வாகத்திறனும் தடைபடுகிறது. இதற்கான சாதனா முறைகளை முன்வைக்கும் யோகமரபு ‘சுசும்னா‘ எனும் மைய நரம்பு மண்டலத்தில் பிராண ஓட்டம் சீராகும் பொழுது, இந்த முடிச்சு அவிழ்ந்து நாம் உலகியல் முழுமை கொள்கிறோம்.

மூன்றாவதாக, ருத்ர-க்ரந்தி, நெற்றிப்பொட்டிலும், உச்சந்தலையிலும் இருப்பதாக உருவகிக்கப்படுகிறது. ஞானமும் முழுமையும் திகழும் இடமாக உருவகிக்கப்படும் இந்த இடம், சேகரமான அனைத்து தேவையற்றதையும் அழித்து, புதிதாகவும் பரிபூரணமாகவும் மாறுவதற்கு வழிவகை செய்கிறது. உயர்தளத்தில் நம்மை இணைப்பதும் உயர்ந்த அறிவை வழங்குவதிலும், ருத்ர-க்ரந்தியின் பங்கு முக்கியமாக குறிப்பிடப்படுகிறது. கிட்டத்தட்ட மறுபிறப்பின் தளம் எனப்படுகிறது.

இதற்கான சாதனைகளின் மூலம் சாதகன் ஒருவன் இந்த க்ரந்திகளை அவிழ்ப்பதன் மூலம் விஞ்ஞான மயகோசம் வரை பயணிக்கிறான். அங்கு நமது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்கிற மூன்றும் அதனதன் தீர்வுகளுடன் இருக்கிறது. ஆகவே சாதகன் தன்னை உயர்வான ஒன்றுடன் இணைத்துக்கொள்கிறான். நண்பர்களே எந்தத் துறையிலும் அதன் கலைச்சொற்கள் மிகவும் முக்கியமான ஒன்றாக வளர்ந்து வந்திருக்கும், உருவகமாக ஒன்றைச் சொல்வதற்கு இதை பயன்படுத்துவர்.

உதாரணமாக குண்டலினி என்பது யோகமரபில் உபயோகிக்கப்படும் ஒரு கலைச்சொல், உடலின் ஒவ்வொரு தளத்திலும், குண்டலினி சக்தி ‘யோகசக்ர’ வடிவில் உறைவதாக சொல்லப்படும். அதை நேரடியாக ‘சக்கரம் ‘ என புரிந்துகொள்ளக்கூடாது. ஒரு உருவகம் மட்டுமே. மூலாதாரச் சக்கரம் ஆணுக்கு பிறப்புறுப்புக்கும் ஆசனவாய்க்கும் நடுவில் அமைந்திருப்பதாக உருவாக்கப்படுத்தப்படுகிறது. உடலியல் ரீதியாக அங்கே அப்படி எந்த உடலுறுப்பையும் காண முடியாது என்பதே உண்மை.

அதே போல ஆக்ஞா சக்கரம் எனும் உருவகம் நமது புருவ மத்தியில் இருப்பதாகவும், பிட்டியூட்டரி சுரப்பிக்கு சொல்லப்படும் அனைத்துக் குணநலன்களும் இதற்கும் சொல்லப்படுவதால் , அந்த சுரப்பியே ‘யோகச் சக்கரம்’என்கிற தேவையற்ற இரண்டு துறைகளின் கருத்துக்களை திரித்தும் குழம்பியும் புரிந்து கொள்ளக்கூடாது. அப்படித்தான் இந்த ‘க்ரந்தி’ என்ற கருத்தும் உருவகமும். அவை மூன்று முடிச்சுகளாக உடலில் எங்கோ ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை. மாறாக அவை ஒட்டுமொத்தமாக வேறு வகையில் பொருள் கொள்ளப்பட்டு அதற்கான பாடத்திட்டங்களை யோகமரபு முன்வைக்கிறது.

யோகமரபின் இந்த அடிப்படைகளை நாம் தெரிந்துகொள்வதற்கான அவசியம் என்பது , உலகம் முழுவதுமே ஒரு குறிப்பட்ட மருத்துவ முறையால் கைவிடப்பட்ட உடல் மற்றும் உள்ளம் சார்ந்த சிக்கலுக்கு, மாற்று மருத்துவத்தை அணுகுவது என்பது இன்று பரவலாகியுள்ளது. நவீன மருத்துவம் சிகிச்சை செய்ய முடியாமல் ‘கைவிட்ட’ நோய்களின் பட்டியல் இருப்பது போலவே ஆயுர்வேதம், யோகம் என அனைத்துத் துறைகளிலும் இப்படி கைவிடப்பட்ட நோய்க்கூறுகள் நிச்சயமாகவே உண்டு.

மாற்று மருத்துவ அல்லது வேறு பாதையைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்களுக்கு இது போன்ற அடிப்படைகள் ஒருவேளை முற்றலும் தீர்வாக அமையலாம். இவ்வகை மாற்று திட்டங்கள் அனைவருக்கமானதாக இல்லாமல் போகலாம் ஆனால் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு பலனளித்தலும் சாலச்சிறந்ததே.

நவ்க சஞ்சால ஆசனா

இந்த பகுதியில் நாம் ‘நவ்க சஞ்சால ஆசனா’எனும் பயிற்சியைக் காணலாம். இது அடிவயிற்றுப் பகுதியை திடமாகவும் ஆரோக்கியமானதாகவும் வைக்க உதவுகிறது. இங்கிருக்கும் தேங்கிய ஆற்றலை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பவும், இலகுவான அடிமுதுகுப் பகுதியை அடையவும் இந்த ஆசனம் உதவும். உணவு செரிமானம் மற்றும் கழிவுகளை உடலிலிருந்து வெளியேற்றுதல் போன்ற முக்கிய பணிகளை செய்யும் மூன்றடுக்கு வயிற்றுப் பகுதியையும், ஆரோக்யமாக வைக்க உதவுகிறது.

கால்களை நீட்டி அமர்ந்து கைகளை தலைக்கு மேல் தூக்கி மூச்சை உள்ளிழுத்து மூச்சு வெளியிடும் பொழுது முன்புறமாக குனிந்து கால்விரல் வரை கையைக் கொண்டு செல்லவும், மூச்சை உள்ளிழுக்கும்பொழுது மீண்டும் உடலையும், கையையும் பின்நோக்கிக் கொண்டு வரவும். இப்படி பத்துமுறை செய்து பலனடையலாம்.

The post ங போல் வளை appeared first on Dinakaran.

Related Stories: