புளிச்சக்கீரையின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

புளிச்சக்கீரை என்று வாசிக்கும்போதே நம் அனைவரின் நாவிலும் புளிப்பின் சுவையினை உணரக்கூடிய அளவிற்கு எல்லோராலும் நன்கு அறியப்பட்ட ஒருவகை கீரைதான் இது. இக்கீரை வருடம் முழுவதும் அனைத்து தட்ப வெப்ப சூழலையும் தாங்கி வளரக்கூடியது. இந்தியா, மலேசியா மற்றும் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தக்கீரை காணப்படுகிறது. புளிச்சக்கீரையில் இரண்டு வகைகள் உண்டு. பச்சைத் தண்டு இலையுடைய கீரை ஹைபிஸ்கஸ் கன்னாபின்ஸ் எனவும், சிவப்புத் தண்டு இலைகளை கொண்டவை ஹைபிஸ்கஸ் சப்டாரிஃபா எனவும் அழைக்கப்படுகின்றது. பொதுவாக, இந்தக் கீரை தென்னிந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

நமது முன்னோர்கள், இக்கீரையை ஒருவகை மூலிகையாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். புளிச்சக்கீரையில் அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் தாதுக்களான கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம். பொட்டாசியம் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இதுமட்டுமின்றி வைட்டமின் ஏ,பி மற்றும் சி அதிகளவு செரிந்து புளிச்சக்கீரையில் காணப்படுவதினால் உடல் வளமையை அதிகரிக்க பயன்படுகிறது.

புளிச்சக்கீரையில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்

பிளேவோனாய்டுகள், பாலிசாக்கரைடுகள், பீனாலிக் மூலக்கூறுகள், கிளைக்கோஸைடுகள், டானின், ஆல்கலாய்டுகள் மற்றும் சாப்போனின் உள்ளிட்ட பல்வேறு மூலக்கூறுகள் காணப்படுகின்றன. குறிப்பாக இதில் காணப்படும் குரோமியம் பிக்ரோலினேட் என்ற மூலக்கூறு இதன் பல்வேறு மருத்துவ பண்புகளுக்கு காரணமாக உள்ளன.

புளிச்சக்கீரையின் மருத்துவ பண்புகள்

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைத்து உடல் வெப்பத்தினை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.சில பெண்களுக்கு பிசிஓஎஸ் பாதிப்பால் கருத்தரித்தலில் பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக புளிச்சக்கீரை செயல்படுகிறது. உடலில் ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜஸ்ட்ரோன் ஹார்மோன் அளவினை சமநிலைப்படுத்த உதவுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்னைக்கு மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.குறைந்த கலோரிகளை இக்கீரை கொண்டுள்ளதினால் உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. மேலும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதினால் செரிமான பிரச்னையை சீர்செய்து மலச்சிக்கல் பிரச்னையை போக்குகிறது.

அதிக ஆன்டிஆக்ஸிடன்டுகள் இக்கீரையில் செரிந்து காணப்படுவதினால் சரும நோய்களை தவிர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்தியினை தூண்டவும் பயன்படுகிறது.உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் செயல்பாட்டினை மேம்படுத்துகிறது.

நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துகிறது. நினைவாற்றல் அதிகரிக்கவும், தூக்கத்தினை மேம்படுத்தவும் உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்து காணப்படுவதினால் ரத்தசோகையை தடுக்கிறது. உடல் சோர்வினை நீக்குகிறது. வைட்டமின் ஏ புளிச்சக்கீரையில் அதிகளவில் இருப்பதனால் கண் பார்வையை சீராக்க உதவுகிறது.

வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதினால் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்புடன் செயல்பட புளிச்சக்கீரை உதவுகிறது. வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்கவும் புளிச்சக்கீரை பயன்படுகிறது. இன்னும் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் இந்தக்கீரையை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நலம் தரும். இக்கீரையை துவையலாகவும், மசியலாகவும், ஊறுகாயாகவும் தயாரித்து உட்கொள்ளலாம். புளிச்சக்கீரை ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.

நீர் கோர்த்தல் பிரச்னை உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்னை இருப்பவர்களுக்கு, புளிச்சகீரையை மசியல் செய்து சாப்பிட்டால் சிறந்த பலன் கிடைக்கும். புளிச்ச கீரையின் பூக்களை நசுக்கி சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறுகளும் நீங்கும்.

சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்தக் கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.இவை சாதாரண செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றுவதற்கு முக்கிய காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட பெரிதும் உதவுகிறது.புளிச்ச கீரையில் இருந்து தயாரிக்கப்படும் கோங்குரா தேநீர், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக பயன்படுத்தப் படுகிறது.

புளிச்ச கீரையில் கொழுப்புச் சத்தை குறைக்கும் பண்புகள் இருப்பதால், இது இருதய வாஸ்குலர் நோய்களை தடுக்கிறது. புளிச்சக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தியானது இயற்கையிலேயே அதிகளவில் உள்ளது. எனவே, புளிச்சக்கீரையினை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் பரவக்கூடிய நோய்க்கிருமிகளை முற்றிலும் அழித்து நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. மேலும் பல்வேறு, நோய் தொற்று கிருமிகளிடமிருந்தும் நம் உடலினை பாதுகாக்கிறது. புளிச்சக்கீரை குறித்து குணப்பாட நூலில் இவ்வாறு கூறியுள்ளது.

வாதமறும் பித்தமுறு மாறா வரோசிவிடுஞ்சீதமுடனே யகலுஞ் சேயிழையே- போதப்
புளித்த விலைக்கறிக்குப் போமிரத்த பித்தங்களித்த கரப்பனொடு காண்

The post புளிச்சக்கீரையின் மருத்துவ குணங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: