நாடாளுமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு: செங்கை எஸ்பி தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு, மார்ச் 28: நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு செங்கல்பட்டில் துணை ராணுவம் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதனை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், தொகுதிகள் வாரியாக துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு செங்கல்பட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் இணைந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நேற்று நடந்தது. மாவட்ட காவல் கண்காப்பாளர் சாய்பிரனீத் தலைமை தாங்கி துணை ராணுவம் கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு மணிகூண்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வேதாச்சலம் நகர் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இராட்டினங்கிணறு பகுதியில் நிறைவு பெற்றது.

இந்த கொடி அணிவகுப்பு பேரணியில், 120 துணை ராணுவத்தினர், தமிழக சிறப்பு படை, மாவட்ட ஆயுத படை போலீசார் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கொடி அணிவகுப்பு பேரணியில் செங்கல்பட்டு கோட்ட துணை கண்காணிப்பாளர் புகழேந்தி, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புகழேந்தி, நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், தனிப்பிரிவு ஆய்வாளர் அலெக்ஸாண்டர், உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், சதாசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு: செங்கை எஸ்பி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: