ஏப்ரல் 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் தலையிட டெல்லி ஐகோர்ட் மறுப்பு: அமலாக்க துறைக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21ம் தேதி கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையை எதிர்த்தும், உடனடியாக தன்னை விடுவிக்கக் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, ‘‘தேர்தல் நெருங்கும் நிலையில், பதவியில் இருக்கும் முதல்வரை கைது செய்தது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. கைது செய்யப்பட்டதன் நோக்கம், முறைகேட்டை கண்டுபிடிப்பதற்காக அல்ல. கெஜ்ரிவாலையும், அவரது ஆம் ஆத்மி கட்சியையும் முடக்குவதே நோக்கம். எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்’’ என்றார். அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ ஆஜராகி, ‘‘இந்த விவகாரத்தில் பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்’’ என்றார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க மறுத்து விட்டார். மேலும், அமலாக்கத்துறை வரும் ஏப்ரல் 2ம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் விடுத்த அவர் விசாரணையை வரும் ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே, கெஜ்ரிவாலுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஒருவார கால அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் இன்று விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

* எல்லா உண்மையையும் கெஜ்ரிவால் இன்று வௌியிடுவார்: மனைவி சுனிதா தகவல்
கெஜ்ரிவால் மனைவி சுனிதா நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்றில், ‘‘மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை 250க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தியது. ஆனாலும் அவர்களால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது கணவர் 28ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் அனைத்து உண்மைகளையும் கூறுவார். மதுபான ஊழல் பணம் எங்கு உள்ளது என்பதை கூறுவார். அதற்கான ஆதாரங்ளையும் அவர் சமர்ப்பிப்பார்’’ என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஆபத்தான நிலையில் சர்க்கரை அளவு
அமலாக்கத்துறை விசாரணையில் உள்ள கெஜ்ரிவாலின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. கெஜ்ரிவாலின் உடலில் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதாகவும், ஒருகட்டத்தில் 46 எம்ஜிக்கு சர்க்கரை அளவு குறைந்ததாகவும், இவ்வளவு குறைந்திருப்பது உயிருக்கு மிகவும் ஆபத்து என டாக்டர்கள் எச்சரித்ததாகவும் கட்சியினர் கூறி உள்ளனர். முன்னதாக கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா வெளியிட்ட வீடியோவில், அமலாக்கத்துறை காவலில் கெஜ்ரிவாலை சந்தித்திதாகவும் அவரது சர்க்கரை அளவு மோசமாக இருப்பதாகவும் கூறி உள்ளார். எனவே கெஜ்ரிவால் உடல் நலம் பெற மக்கள் வேண்டிக் கொள்ளுமாறும் சுனிதா கூறி உள்ளார்.

* அமெரிக்க தூதருக்கு கண்டனம்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘கெஜ்ரிவால் கைதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. கெஜ்ரிவாலுக்கு நியாயமான, வெளிப்படையான, சரியான சட்ட நடவடிக்கை வழங்கப்பட வேண்டுமென விரும்புகிறோம்’ என்றார். இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர பொறுப்பு துணை தூதர் குளோரியா பெர்பெனாவுக்கு சம்மன் அனுப்பிய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. முன்னதாக இந்த விவகாரத்தில் ஜெர்மனி கருத்து தெரிவித்த போதும் அந்நாட்டு தூதரை அழைத்து வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

* சிறையிலிருந்து அரசை நடத்த முடியாது
அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே அமைச்சர்களுக்கு கெஜ்ரிவால் இதுவரை 2 உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்நிலையில், டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா நேற்று அளித்த பேட்டியில், ‘‘சிறையில் இருந்து டெல்லி அரசை நடத்த முடியாது என டெல்லி மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்’’ என கூறி உள்ளார். மேலும், விசாரணைக்கு நடுவே கெஜ்ரிவால் எப்படி தனது அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பி உத்தரவுகளை பிறப்பித்தார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பாஜ பிரதிநிதிகள் போலீஸ் கமிஷனர் சஞ்சய் ஆரோராவிடம் நேற்று முறையிட்டுள்ளனர்.

* சட்டப்பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி, பாஜ போராட்டம்
டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடர், முதல்வர் கெஜ்ரிவால் இல்லாமல் முதல் முறையாக நேற்று கூடியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆம் ஆத்மி கட்சியினர் மஞ்சள் நிற டிஷர்ட் அணிந்திருந்தனர். அதில், ‘மோடியின் மிகப்பெரிய பயம் கெஜ்ரிவால்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. மேலும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் ‘நானும் கூட கெஜ்ரிவால்தான்’ என கோஷமிட்டனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், கெஜ்ரிவாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல, பாஜ கட்சியினர் அவைக்கு கருப்பு நிற டிஷர்ட் அணிந்தபடி பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், உடனடியாக கெஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டுமென கோஷமிட்டனர். 100க்கும் மேற்பட்ட பாஜவினர் கூடியதால் அவர்களை போலீசார் பேரவை வளாகத்தில் நுழைய விடாமல் தடுத்தனர்.

The post ஏப்ரல் 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் தலையிட டெல்லி ஐகோர்ட் மறுப்பு: அமலாக்க துறைக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: