பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு: காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று நடைபெற்றது. இந்த அணிவகுப்பை மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 446 ஆண் வாக்களர்களும், 8 லட்சத்து 92 ஆயிரத்து 947 பெண் வாக்காளர்களும், 304 திருநங்கைகள் என மொத்தம் 17 லட்சத்து 44 ஆயிரத்து 697 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1417 வாக்குச்சாவடிகளில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த பதற்றமான வாக்கு சாவடிகளில் தேர்தல் நாளன்று அனைத்து நடைமுறைகளும் சிசிடிவி கேமரா மூலம் நேரடியாக மாவட்ட மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தேர்தலின்போது மோதல் ஏற்பட்டால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து விடும் என்பதை கருத்தில் கொண்டு, 100 சதவீத வாக்குப்பதிவிற்கு எந்தவித இடைஞ்சலும் ஏற்படாத வகையில், மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக காஞ்சிபுரத்தில் துணை ராணுவப்படை மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி அணிவகுப்பு பேரணியை மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடியில் தொடங்கிய பேரணி ராஜ வீதிகள் வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து நிறைவடைந்தது. இந்த கொடி அணிவகுப்பில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கோயம்புத்தூரில் இருந்து வந்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் உதவி கமாண்டன்ட் பிரதீஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர். நிகழ்வின்போது ஏடிஎஸ்பிக்கள் வெள்ளத்துரை, பாலகுமாரன், சார்லஸ் சாம்ராஜ், காஞ்சிபுரம் டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் உள்ளிட்ட போலீசார் கலந்துகொண்டனர்.

திருப்போரூர்: கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் வெங்கடேசன், தாழம்பூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தாழம்பூர் போலீசாரின் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த கொடி அணிவகுப்பு, தாழம்பூர் காவல் நிலையத்தில் துவங்கி ஓஎம்ஆர் சாலை வழியாக நாவலூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று தாழம்பூர் சந்திப்பில் நிறைவடைந்தது. இதில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எந்த ஒரு அச்சமுமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

The post பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு: காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: