100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதிநவீன விழிப்புணர்வு வீடியோ வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதி நவீன விழிப்புணர்வு வீடியோ வாகனத்தினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 11ம் தேதி முதல் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி வாரியாக 100 சதவீதம் வாக்களிப்போம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தேர்தல் உறுதிமொழி எடுத்தல், பேனர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வைத்து பிரசாரம் செய்தல், பள்ளி மாணவர்களுக்கு கலச்சார போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல், அரசு களப்பணியாளர்களை கொண்டு பொதுமக்களின் வீட்டிற்கே சென்று துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் உறுதிமொழி எடுத்தல், மாற்றுதிறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று வாக்கு பதிவு செய்துவது குறித்து விழிப்புணர்வு அளித்தல், சுய உதவிகுழுக்களை கொண்டு மாவட்ட அளவில் ரங்கோலி போட்டிகள் நடத்துதல், மனித சங்கலி, பைக் பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், தலைமை தேர்தல் அலுவலகம் மூலம் வரப்பெற்ற ஒரு குறும்படம் தயாரித்து குறுந்தகடு மூலம் அனுப்பப்பட்டதை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உள்ள அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் திரையிடப்படவுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சி, உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் மற்றும் குன்றத்தூர், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் கடந்த 25ம் தேதி முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை நாள்தோறும் வீடியோ பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், படக்காட்சி நடத்தப்படவுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அதிநவீன வீடியோ வாகனம் மூலம் ஒளிப்பரப்படும் தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கலைச்செல்வி மோகன், அதிநவீன வீடியோ வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, மகளிர் திட்ட இயக்குநர் கவிதா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தலைமை தேர்தல் அலுவலகம் மூலம் வரப்பெற்ற ஒரு குறும்படம் தயாரித்து குறுந்தகடு மூலம் அனுப்பப்பட்டதை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உள்ள அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் திரையிடப்படவுள்ளது.

குன்றத்தூர்: குன்றத்தூரில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசு கல்லூரி மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். குன்றத்தூர் வருவாய் துறை சார்பில், நாடாளுமன்ற தேர்தலின் வாக்காளர்கள், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, குன்றத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை நேற்று நடத்தினர். இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து, வீதி வீதியாக சென்று கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கி சாலையில் ஊர்வலமாக நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அத்துடன், கல்லூரியில் பயிலக்கூடிய மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோர் முதல் வாக்காளர்களாக இருப்பதால், அவர்களும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இப்பேரணியில், உதவி தேர்தல் அலுவலர் கண்ணன், தேர்தல் அதிகாரிகள், வருவாய் துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதிநவீன விழிப்புணர்வு வீடியோ வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: