கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கைதை கண்டித்து பிரதமரின் வீட்டை நோக்கி ஆம்ஆத்மி கட்சியினர் பேரணி: போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு

புதுடெல்லி: கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமர் மோடியின் வீட்டை நோக்கி ஆம்ஆத்மி பேரணி செல்ல முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கிய ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, தற்போது அமலாக்கத்துறை கஸ்டடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

லோக்சபா தேர்தல் ெநருங்கியுள்ள நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வரும் 31ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் சேர்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் இன்று காலை முதலே, டெல்லி படேல் சவுக் மெட்ரோ நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்து பிரதமர் இல்லம் வரை பேரணியாக செல்ல திட்டமிட்டனர். ஆனால் பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது. அதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருக்கும், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆம்ஆத்மி கட்சியினர், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படேல் சவுக் மெட்ரோ நிலையத்திற்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்றும், 5 நிமிடங்களில் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் போலீசார் அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டே இருந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். முக்கிய நிர்வாகிகளை போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே, முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் ராஜினாமா செய்யக் கோரி டெல்லி செயலகம் நோக்கி பாஜகவினர் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கைதை கண்டித்து பிரதமரின் வீட்டை நோக்கி ஆம்ஆத்மி கட்சியினர் பேரணி: போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.

Related Stories: