தாராபுரம் அருகே டிப்பர் லாரி மோதி பேருந்துக்கு காத்திருந்த 2 பேர் பரிதாப பலி

தாராபுரம் : திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சின்னக்காம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஆறுச்சாமி (55). இவர் தாராபுரம்-பொள்ளாச்சி சாலை சின்னக்கம்பாளையம் பிரிவில் உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அங்கு இதே ஊரை சேர்ந்த தங்கம்மாள் (65) மற்றும் சிலர் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சின்னக்கம்பாளையம் பிரிவில் இருந்து வந்த டிப்பர் லாரி சாலையோரம் பேருந்துக்காக காத்து நின்ற பயணிகள் கூட்டத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் புகுந்தது.

இந்த விபத்தில் தொழிலாளி ஆறுச்சாமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்தார். சின்னக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த யூதாஸ் என்பவரது மனைவி தங்கம்மாள் (65) என்பவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஆறுச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது என தெரிய வந்தது. படுகாயம் அடைந்த தங்கம்மாளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த தொழிலாளி ஆறுச்சாமிக்கு லட்சுமி (50) என்ற மனைவியும், மகுடீஸ்வரி (25) என்ற மகளும், கார்த்திக் (30) என்ற மகனும் உள்ளனர்,விபத்துக்கு காரணமான சின்னக்கம்பாளையம் கன்னியப்பன் என்பவரது டிப்பர் லாரி ஓட்டுனர் மற்றும் அதன் உரிமையாளர் இருவரையும் சம்பவம் நடந்து 8 மணி நேரமாகியும் கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை கண்டித்து தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு விபத்தில் உயிரிழந்த ஆறுச்சாமி மற்றும் தங்கம்மாள் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தாராபுரம்-கரூர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி, டிஎஸ்பி கலையரசன் மற்றும் காவல் ஆய்வாளர் ரவி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டத்தால் அவ்வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

The post தாராபுரம் அருகே டிப்பர் லாரி மோதி பேருந்துக்கு காத்திருந்த 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: