ஊருக்குள் புகுந்த முதலைகள்

சிதம்பரம், மார்ச் 26: சிதம்பரம் மேல்தவர்தாம்பட்டு கிராமத்தில் வசித்து வரும் கூலிதொழிலாளி செல்வகுமார் என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 அடி நீளமுள்ள 120 கிலோ எடை கொண்ட முதலை ஒன்று புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கூட்டம் கூடினர். பின்னர் இது குறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவுபடி, சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர், வனவர் பிரபு, பீட் வனக்காப்பாளர் அன்புமணி, புவனகிரி பீட் வனக்காப்பாளர் ஞானசேகர், வனக்காப்பாளர்கள் அலமேலு, புஷ்பராஜ் உள்ளிட்டவர்கள் வீட்டிற்குள் புகுந்த முதலையை பத்திரமாக பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் பத்திரமாக விட்டனர். இதே போல் அன்றைய தினம் இரவு சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி பகுதிக்குள் புகுந்த சுமார் 6 அடி நீளம், 50 கிலோ எடை கொண்ட முதலையை வனக்காப்பாளர்கள் பிடித்து வக்காரமாரி ஏரியில் விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஊருக்குள் புகுந்த முதலைகள் appeared first on Dinakaran.

Related Stories: