வேலூர் சைதாப்பேட்டையில் பல மாதங்களுக்கு பிறகு கழிவுநீர் கானாற்றில் தூய்மைபணி

வேலூர்: வேலூர் சைதாப்பேட்டை கழிவுநீர் கானாறு பல மாதங்களுக்கு பிறகு இன்று மாநகராட்சி பணியாளர்களால் தூர்வாரப்பட்டது. வேலூர் சைதாப்பேட்டை மலையில் இருந்து துவங்கும் மழைநீர் கானாறு தற்போது நகரின் ஒரு பகுதி கழிவுநீரை சுமந்து செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இந்த கானாற்றில் மக்கா திடக்கழிவுகளை வீசுவதும், படுக்கைகள், தெர்மோகோல் பலகைகள், டியூப் லைட்டுகள், பாய், தலையணை ஆகியவற்றை மெயின் பஜார் மற்றும் அதை சுற்றியுள்ள விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் கொண்டு வந்து வீசுவதும், அதனால் கானாறு அடைப்பட்டு தூர்ந்து கழிவுநீர் அருகந்தம்பூண்டி பகுதி மக்களின் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்து அவர்களை அல்லல்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது.

இதனால் இந்த கானாற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தூய்மைப்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும் என்று சைதாப்பேட்டை மற்றும் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஆண்டுக்கு ஓரிருமுறையே இந்த கானாறு தூர்வாரப்படுகிறது. அதன்படி, இன்று காலை வேலூர் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் சைதாப்பேட்டை கானாற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

The post வேலூர் சைதாப்பேட்டையில் பல மாதங்களுக்கு பிறகு கழிவுநீர் கானாற்றில் தூய்மைபணி appeared first on Dinakaran.

Related Stories: