வேதம் வந்த மாதம்..!

‘ரமலான் மாதம் எத்தகையதென்றால், அந்த மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழி காட்டியாகவும், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.’ (குர்ஆன் 2:185) குர்ஆன் என்றால் நேர்வழி என்றும் ஒரு பொருள் உண்டு. சத்தியம் – அசத்தியம், நன்மை – தீமை, வெற்றி – தோல்வி ஆகியவற்றின் பாதையை அது மனிதனுக்குத் தெளிவாகக் காட்டுகிறது. மனிதனின் எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வுகாண குர்ஆனின் பக்கம் சென்றாலே போதும். மனிதனிடமுள்ள அருட்கொடைகளிலேயே மிகப் பெரியது அறிவாற்றல்தான். ஆனால், இறைவேதம் அதையும் விடப் பெரிய அருளாகும். அது அறிவுக்கே ஆசிரியனாகத் திகழ்கிறது.

இறைவன் வேத வழிகாட்டுதல்களை வழங்காமல் இருந்திருந்தால், நிலைமை என்னவாகியிருக்கும்? மனிதன் தன்னிடமுள்ள அறிவின் துணைகொண்டு உலகியல் பொருட்கள், அவற்றின் பயன்பாடுகள், அவற்றைக் கையாளும் வழிமுறைகள் ஆகியவற்றை வேண்டுமானால் கண்டறிந்திருக்க முடியும். ஆனால் தர்மம், அதர்மம், நீதி, அநீதி இவற்றை எல்லாம் இனம் காண்பதற்கு சாத்தியமில்லாமல் போயிருக்கும். இயல்பாகவே, மனிதனிடம் காணப் படும் ஒழுக்க உணர்வு, நற்சிந்தனை இவையெல்லாம் வேதம் அவனுக்கு அளித்த வெகுமதிகளாகும்.

இறைவனையும் வேதங்களையும் மறுக்கின்ற நாத்திகர்களிடம்கூட ஏதேனும் நற்பண்புகள் குடியிருக்குமானால், அதுவும் இந்த வேத அறிவுரைகளின் தாக்கமே. வேத வெளிச்சத்தின் ஒளிக்கீற்றுகள் இல்லாது போயிருந்தால் மனிதர்களிடத்தில் மனிதத் தன்மை என்ற ஒன்றைக் கண்டுபிடிக்கவே முடியாமல் போயிருக்கும். காரிருளில் மனிதன் சிக்கித் தடுமாறக் கூடாது என்பதற்காகவே, இறைவன் தன் வேதவெளிப்பாட்டின் மூலம் அவ்வப்போது தன் தூதர்கள் வாயிலாக மனிதனுக்கு நேர்வழி காட்டிக் கொண்டிருந்தான். இறுதியாக, முஹம்மத்(ஸல்) அவர்கள் மூலம் இந்தக் குர்ஆனை கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்காவில் அருளினான். அன்றிலிருந்து இன்று வரை இனி என்றென்றும் மனிதகுலத்திற்கு வாழ்வின் தெளிவான பாதையைக் காட்டும் இறுதி இறைவேதமாக ஒளி வீசிக்கொண்டிருக்கும்.

குர்ஆன் வெறும் சட்ட நூல் அல்ல. தத்துவங்கள், நீதி போதனைகள், அத்தாட்சிகள் ஆகியவற்றின் கருவூலமாகும். மனித அறிவுக்கு முன்னால் ஏற்றி வைக்கப்பட்ட, என்றுமே அணைந்திடாத, எவராலும் அணைத்திட முடியாத ஒளிவிளக்காகும். இப்படி எண்ணிலடங்கா மகத்துவங்கள் நிறைந்த இந்தக் குர் ஆனின் வசனங்கள், இறங்கத் தொடங்கியது இந்தப் புனித ரமலான் மாதத்தில்தான். அதனால்தான் அதன் மகத்துவத்தைப் போற்றும் வகையிலும் அதற்கு நன்றி செலுத்தும் வகையிலும், ரமலான் மாதத்தை இறைவன் நோன்புக்காக நிர்ணயித்தான். வேறொரு வகையில் சொல்வதானால் குர்ஆன் ஒழுக்கச் சீர்திருத்தத்தின் பாடங்களாகும். அந்தப் பாடங்களைப் படித்தபின் அந்தப்படிப்புக்கேற்ப, திறன்மிக்க, அறிவுப்பூர்வமான, தெளிவான செயல்முறைப் பயிற்சியை நோன்பு நமக்குத் தருகிறது.

– சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“இது (குர்ஆன்) இறைவனின் வேதமாகும். அதில் யாதொரு ஐயமும் இல்லை.” (குர்ஆன்2:2)

The post வேதம் வந்த மாதம்..! appeared first on Dinakaran.

Related Stories: