ரபேல் போர் விமான பேரத்தில் தொடர்புடைய விமானப்படை மாஜி தலைமை தளபதி பதவுரியா பாஜவில் ஐக்கியம்

புதுடெல்லி: இந்திய விமானப் படையின் முன்னாள் தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியாநேற்று பாஜவில் இணைந்தார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த முன்னாள் அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்த தரன்ஜித் சிங் சாந்து கடந்த 19ம் தேதி பாஜவில் சேர்ந்தார்.

இந்நிலையில் இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி ராகேஷ் குமார் சிங் பதவுரியா நேற்று பாஜவில் இணைந்தார். டெல்லியில் பாஜ பொதுசெயலாளர் விநோத் தாவ்டே, ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் பாஜவில் சேர்ந்தார்.  பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கிய போது அதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பிரான்ஸ் குழுவுடன் ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக பேச்சு நடத்திய இந்திய விமானப்படை குழுவின் தலைவராக இருந்தவர் பதவுரியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்றொரு தலைவர் பாஜவில் இணைந்துள்ளார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான வரபிரசாத் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது திருப்பதி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றார். மேலும், கடந்த 2019ல் கூடூரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அவருக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில் டெல்லியில் நேற்று பாஜவில் அவர் இணைந்தார்.

The post ரபேல் போர் விமான பேரத்தில் தொடர்புடைய விமானப்படை மாஜி தலைமை தளபதி பதவுரியா பாஜவில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Related Stories: