300 ஏக்கர் விழல்கள் எரிந்து நாசம்

 

சேத்தியாத்தோப்பு, மார்ச் 24: சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை கிராமத்தில் விருத்தாசலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 500 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி முழுவதும் விழல்கள் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. குடிசை வீடுகளுக்கு விழலை வேய்ந்தால் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் அப்பகுதி கிராம மக்கள் பெரும்பாலும் குடிசை வீடுகளுக்கு விழலை பயன்படுத்தி வந்தனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியில் இருந்த விழலை ஏலம் விடாமலும், கண்காணிக்காத காரணத்தினாலும் நேற்று காலை 11 மணியளவில் மர்ம நபர்கள் ஏரியில் உள்ள விழல்களுக்கு தீ வைத்துள்ளனர். இதனால் ஏரி முழுவதும் இருந்த விழல்களில் மளமளவென தீ பரவி எரிய தொடங்கியதையடுத்து அப்பகுதி வாசிகள் உடனடியாக சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்க முயற்சித்தனர். பரப்பளவு அதிகம் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். விழல்கள் மிகுந்த பகுதியாகவும், கரடு முரடான காடுகளாகவும் இருந்ததால் தீயணைப்பு வாகனம் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஏரியில் இருந்த 300 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த அனைத்து விழல்களும் எரிந்து நாசமாகின. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. எரிந்த விழலின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கத்தாழை ஏரியில் உள்ள விழல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post 300 ஏக்கர் விழல்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: