ஏ… நானும் ரவுடி தான்… நானும் ரவுடி தான்…என் மேல 14 கிரிமினல் வழக்கு இருக்கு

கொல்கத்தா: ஒன்றிய இணையமைச்சர் நிசித் பிரமானிக் தன் மீது 14 குற்ற வழக்குகள் இருப்பதாக பிராமண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தை சேர்ந்த நிசித் பிரமானிக் கடந்த 2019ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். 2019 மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தின் கூச் பெஹார் தொகுதியில் போட்டியிட்டு வென்ற நிசித் பிரமானிக், தற்போது ஒன்றிய இணைஅமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் நிசித் பிரமானிக் மீண்டும் கூச் பெஹார் தொகுதியில் போட்டியிடுகிறார். கூச் பெஹார் தொகுதியில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் கடந்த புதன்கிழமை(21ம் தேதி) வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நிசித் பிரமானிக் வேட்பு மனு தாக்கல் செய்தார். அத்துடன் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து, குற்ற பின்னணி உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துள்ளார்.

நிசித் பிரமானிக் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “நான் தொடக்கப் பள்ளி உதவி ஆசிரியர். என் மனைவி இல்லத்தரசி. 2022-23ல் என் ஆண்டு வருமானம் ரூ.10.72 லட்சம். இது 2023-24ல் ரூ.12.34 லட்சமாக உள்ளது. 2019 மக்களவை தேர்தலுக்கு முன் என் மீது 11 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2023-24ல் குற்ற வழக்குகள் 14ஆக உயர்ந்துள்ளது.

இதில் 9 வழக்குகள் 2018-2020 காலகட்டத்திலும், பிற வழக்குகள் 2009-2014 காலகட்டத்திலும் பதிவாகி உள்ளன. 12 வழக்குகள் கூச் பெஹார் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும், 2 வழக்குகள் அலிபுர்துவாரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலை முயற்சி, கலவரம், அத்துமீறி உள்ளே நுழைதல், சட்டவிரோதமாக கூட்டங்களை நடத்துதல் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனக்கு எதிரான எந்தவொரு வழக்கிலும் எந்த குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஏ… நானும் ரவுடி தான்… நானும் ரவுடி தான்…என் மேல 14 கிரிமினல் வழக்கு இருக்கு appeared first on Dinakaran.

Related Stories: