221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு

சேலம், மார்ச் 24: சேலம் மத்திய சிறையில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்கத்தின் கீழ், முற்றிலும் எழுத படிக்க தெரியாத கைதிகளுக்கான சிறப்பு எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு 2023-2024ம் கல்வியாண்டில் 11 தன்னார்வலர்களைக் கொண்டு, 195 ஆண் மற்றும் 26 பெண் என மொத்தம் 221 கைதிளுக்கு, கடந்த ஆறு மாதங்களாக எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, அவர்களுக்கான அடிப்படை மதிப்பீட்டு தேர்வு சேலம் மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் நடந்தது. சிறை கண்காணிப்பாளர் வினோத், தேர்வு பொறுப்பு அலுவலராக செயல்பட்டார்.

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக வழிகாட்டுதலின்படி, மத்திய சிறையில் நடைபெற்ற தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பார்வையிட்டார். அப்போது, உதவி திட்ட அலுவலர் மாரியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுபா ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து, வினாத்தாள்கள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெறும் பயனாளிகளுக்கு, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இத்தேர்வை தமிழகம் முழுவதும் 9 மத்திய சிறைச்சாலைகளில் 1,249 கைதிகள் எழுதினர். தமிழ்நாடு அரசின் 100 சதவீத நிதி பங்களிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: