‘வருமுன் காப்போம்’ திட்டத்தில் 3 ஆண்டில் 1.84 லட்சம் பேர் பயன்

சேலம், மார்ச் 23: சேலம் மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1.84 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இதயம் காப்போம், சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத்திட்டம் உள்ளிட்ட ஏராளமான சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 2021ம் ஆண்டு “கலைஞரின் வருமுன் காப்போம்’’ திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இத்திட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் சர்க்கரை, காசநோய், உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் உள்ளிட்ட நோய்களை ரத்த பரிசோதனை மற்றும் எக்ரே மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

அவ்வாறு மருத்துவ பரிசோதனையில் நோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், பாதிப்பின் தீவிரம் அதிகம் உள்ளவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைந்தும் வருகின்றனர். இதனால் ஏராளமான ஏழை, எளிய மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரும்முன் காப்போம் திட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை, சிறப்பு சிகிச்சை எளிதில் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நோய்களுக்கான அதிநவீன மருத்துவ பரிசோதனை, சிறப்பு மருத்துவ சிகிச்சை, மற்றும் உடல்நலம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட ேநாய்கள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், காசநோய், மூட்டுவலி, இதயம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். அதே போல், கர்ப்பிணி தாய்மார்கள், பெண்களுக்கான சிறப்பு மருத்துவம், குழந்தைகள் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத மலைக்கிராம பகுதிகளிலும் முகாம் நடத்தப்படுகிறது. முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.ேநாயின் தன்மைக்கு ஏற்ப தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற விபரங்களுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. தொடர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு தேவைப்படும் விவரங்கள் அனைத்தும் மாவட்ட அளவில் முகாம் வாரியாக கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ெதாடர் சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டில் 64 முகாம்களில் 59 ஆயிரத்து 886 பேரும், 2022-2023ம் ஆண்டில் 64 முகாம்களில் 57 ஆயிரத்து 682 பேரும், 2023-24ம் ஆண்டில் 67 ஆயிரத்து 201 பேர் என மொத்தம் மூன்று ஆண்டுகளில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 769 பேர் பயனடைந்துள்ளனர்.இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

The post ‘வருமுன் காப்போம்’ திட்டத்தில் 3 ஆண்டில் 1.84 லட்சம் பேர் பயன் appeared first on Dinakaran.

Related Stories: