100 சதவீதம் வாக்களிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

சேலம், மார்ச் 23: சேலம் மாவட்டத்தில் உள்ள இளம் வாக்காளர்கள் 100சதவீத வாக்குப்பதிவினை அளித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று கல்லூரி மாணவிகளுக்கு கலெக்டர் பிருந்தாதேவி அறிவுறுத்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி சேலம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று அம்மாபேட்டை சக்தி கைலாஷ் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டார்.

அப்போது, கல்லூரி வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து அமைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்ட், கையெழுத்து இயக்கம் மற்றும் வண்ணக் கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை பார்வையிட்டார்.பின்னர் மாணவிகள் மத்தியில் கலெக்டர் பிருந்தாதேவி பேசுகையில், ‘‘இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர்கள் தங்களின் வாக்குப்பதிவினை அளித்திடும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இளம் வாக்காளர்கள் 100 சதவிகித வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் வகையில், கல்லூரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் நமக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த நல்வாய்ப்பினை தவறாது நாம் பயன்படுத்துவதுடன், நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் அனைவரும், வரும் ஏப்ரல் 19ம் தேதியன்று 100 சதவீத வாக்குப்பதிவினை அளித்து, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும்,’’ என்றார். அப்போது கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

The post 100 சதவீதம் வாக்களிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: