3வது நாளாக யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை

 

ஊட்டி, மார்ச் 23: பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் துவங்கிய நிலையில், மூன்றாவது நாளான நேற்றும் நீலகிரி தொகுதியில் போட்டியிட யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. 18வது பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. நீலகிரி பாராளுமன்ற தொகுதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டமன்ற தொகுதிகளும், சமவெளிப் பகுதிகளில் மேட்டுப்பாளையம், அவிநாசி மற்றும் பவானிசாகர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கியது.

சமவெளிப் பகுதிகளில் உள்ளவர்கள் நீலகிரி தொகுதியில் போட்டிட வேண்டுமாயின், பாராளுமன்ற தேர்தலுக்கான தலைமை அலுவலகம் (மாவட்ட கலெக்டர் அலுவலகம்) ஊட்டியில் உள்ள நிலையில், அவர்கள் ஊட்டிக்கே வந்து வேட்புமனுதாக்கல் செய்ய வேண்டும். கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில், மூன்று நாட்களாக எந்த ஒரு அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

எனினும் வழக்கம் போல், நேற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதேபோல், கலெக்டர் அலுவலகம் வழியாக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், மூன்றாவது நாளான நேற்றும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை வேட்புமனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

The post 3வது நாளாக யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை appeared first on Dinakaran.

Related Stories: