தேர்தல் கமிஷனில் இந்தியா கூட்டணி புகார்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் நேற்று தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர். காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், அபிஷேக் சிங்வி, திரிணாமுல் காங்கிரஸ் டெரிக் ஓ பிரையன் , நதிமுல் ஹக், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சந்தீப் பதக், பங்கஜ் குப்தா, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவு தலைவர் ஜிதேந்திர அவாத், திமுகவின் பி வில்சன், சமாஜ்வாடி கட்சியின் ஜாவேத் அலி ஆகியோர் இதுகுறித்து நேரடியாக சென்று தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர். ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதாதளம், சிவசேனா உத்தவ்பிரிவு சார்பில் பிரதிநிதிகள் செல்லாத நிலையில் இந்தியா கூட்டணியின் தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவித்தனர்.

தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் அளித்த மனுவில்,’தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகும் ஒன்றிய அரசு இடைவிடாமல், அப்பட்டமாக, சட்டவிரோதமாக எதிர்க்கட்சிகளை அடக்க விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தனர். தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்த பிறகு காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி, ‘ சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயகத்தின் இதயமும் ஆன்மாவும் ஆகும். கெஜ்ரிவாலை இப்போது கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

The post தேர்தல் கமிஷனில் இந்தியா கூட்டணி புகார் appeared first on Dinakaran.

Related Stories: