அவைத்தலைவர் பதவி கிடைக்காததால் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடும் அதிருப்தி: ஆதரவாளர்களுடன் ஆலோசனை

சென்னை: அவைத்தலைவர் பதவி கிடைக்காததால் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் உள்ளார். அதிமுக அவைத்தலைவர் பதவியை பிடிக்க மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் ஆர்வம் காட்டினார். ஆனால் அவருக்கு அந்த பதவி வழங்கப்படாததால் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ”கட்சியில் 50க்கும் மேற்பட்ட அமைப்பு செயலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் உள்ளது. அதேபோன்று நீண்ட போராட்டத்துக்கு பிறகு கட்சியை வழிநடத்தி செல்ல, வழிகாட்டு குழு உறுப்பினர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கும் கடந்த ஓராண்டாக எந்த பொறுப்பும் வழங்கப்படாமல், டம்மியாக வைக்கப்பட்டுள்ளனர். இப்படி கட்சியில் மூத்த தலைவர்களுக்கு பதவிகளை பிரித்து வழங்காமல், ஒரு சிலரே வைத்துக்கொண்டு இருப்பது நல்லதல்ல” என்று வெளிப்படையாக குற்றம்சாட்டினார். அதிமுகவில் அவைத்தலைவர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சியின் செயற்குழு, பொதுக்குழு மற்றும் அவசர கூட்டங்கள் நடைபெறும்போது அவைத்தலைவர் தலைமையில்தான் கூட்டங்கள் நடைபெறும். ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது அவைத்தலைவர் பதவிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். இந்த நிலையில்தான், காலியாக உள்ள அவைத்தலைவர் பதவியை கைப்பற்ற செங்கோட்டையன் முயற்சி செய்து வந்தார். கட்சி முன்னணி தலைவர்களும் செங்கோட்டையனுக்கு தான் அந்த பதவி வழங்கப்படும் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில், தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு, செங்கோட்டையனுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கட்சி தலைமை மீது செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் உள்ளார். கட்சியில் தனது நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய, ஈரோட்டில் உள்ள ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தலைமைக்கு எதிராக தனது அறிவிப்பை விரைவில் அவர் வெளியிடுவார் என ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். மூத்த தலைவர்களுக்கு பதவிகளை பிரித்து வழங்காமல், ஒரு சிலரே வைத்துக்கொண்டு இருப்பது நல்லதல்ல….

The post அவைத்தலைவர் பதவி கிடைக்காததால் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடும் அதிருப்தி: ஆதரவாளர்களுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: