வாய்ப்புற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்வோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

நாளுக்கு நாள் நவீனங்கள் பெருக பெருக நோய்களும் பெருகிவருகிறது. அதிலும், சமீபத்திய உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால், புற்றுநோயினால் பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அந்த வகையில், வாய்ப்புற்றுநோயும் ஒன்று. வாய்ப்புற்றுநோய் எதனால் வருகிறது.. அதற்கான சிகிச்சை முறைகள் என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சிவ சுப்பிரமணியன் வாய்ப்புற்றுநோய் என்றால் என்ன.. யாருக்கெல்லாம் வரலாம்…

வாய்புற்றுநோய் என்பது நாக்கு, தாடை, தொண்டைப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயாகும். இந்த புற்றுநோய் பெண்களைவிட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. காரணம், ஆண்களிடையே உள்ள புகைப்பழக்கம் மற்றும் புகையிலை பயன்பாடு போன்றவற்றினால் ஏற்படுகிறது. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கழித்து புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்றால், புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு நேரிடையாக வாயில் புகையிலையை அடக்குவதால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்

வாய்ப்புற்றுநோயை பொருத்துவரை எந்த இடத்தில் புற்று செல்கள் உள்ளது என்பதை பொருத்து அறிகுறிகள் மாறுபடும். உதாரணமாக, தொண்டைப்புற்று ஏற்பட்டிருந்தால், சிலநாள்களில் குரலில் வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். நாளடைவில் தொண்டை கட்டியது போன்று குரல் மாறிவிடும். சாப்பிடும் போதும் விழுங்குவதில் சிரமம் இருக்கும். எந்த உணவைச் சாப்பிட்டாலும் தொண்டையில் அடைப்பது போன்ற உணர்வு இருக்கும்.வழக்கத்துக்கு மாறாக எச்சில் நிறைய சுரக்க ஆரம்பிக்கும். இவை எல்லாம் தொண்டைப் புற்றுநோயின் அறிகுறிகளாகும்.

புகைபடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், புகையிலை போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக காது மூக்கு தொண்டை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.அதுவே, தாடை, நாக்கு பகுதிகளில் புற்று ஏற்பட்டிருந்தால், வாயில் புண் வரலாம். இந்த புண் ஏற்பட்டு இரண்டு வாரத்திற்கு மேல் ஆறாமல் இருந்தால் அல்லது ஒருமாதம் வரை தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சோதனை செய்துகொள்ள வேண்டும்.பற்கள், ஈறுகளில் காணப்படும் நாள்பட்ட வீக்கம் கழுத்துப்பகுதியில் நெறிகட்டிகள் போன்று தோன்றுவது இவையெல்லாம் வாய்ப்புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும்.

சிகிச்சை முறைகள்

நாள்கணக்கில் ஆறாமல் இருக்கும் புண்ணின் சதைப்பகுதியை எடுத்து பயாப்ஸி சோதனை செய்யப்படும். அதன்மூலம், புற்றுசெல்கள் இருப்பது உறுதியானால், அந்த புற்று செல்கள் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். வாய்ப்புற்றுநோய்க்கான பொதுவான சிகிச்சை என்றால், அது அறுவை சிகிச்சை மேற்கொள்வது தான். அதாவது, தாடை, நாக்குப் பகுதியில் வரும் புற்றுநோய்க்கு அறுவைச் சிகிச்சை தான் செய்தாக
வேண்டும்.

ஒருவேளை தொண்டைப் புற்றுநோயாக இருந்தால், அப்போது அறுவை சிகிச்சை செய்வது கடினம். ஏனென்றால், தொண்டைப்பகுதியில் ரத்த குழாய்களும் குரல்வளையும் அருகில் இருப்பதால், அறுவை சிகிச்சை செய்யும்போது, ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். மேலும் குரல்வளை பாதிக்கப்பட்டு பேச முடியாமலும் போகலாம். எனவே, தொண்டைப் புற்றுக்கு கதிர்வீச்சு எனும் ரேடியோ தெரபி சிகிச்சையே மேற்கொள்ளப்படும். ஒருவேளை முற்றியநிலையில் ஏற்கெனவே குரல்வளை பாதிக்கப்பட்டு பேச்சு போயிருந்தால், அப்போது அவர்களுக்கு
அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும்.

அதுபோன்று, சிலர் புற்றுநோய் முற்றியநிலையில் வாயே திறக்க முடியாமல் வருவார்கள். அந்த நிலையில் வருபவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் கடினமானது. அப்போது அவர்களுக்கு ரேடியோ தெரபி, கீமோ தெரபி, இம்னோ தெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும்.

வாய்ப்புற்றுநோய் பொருத்தவரை அதிகமாக காணப்படுவது நாக்கு, தாடை ஆகிய இடங்களில் வரும் புற்றுதான். இதுதவிர, நாக்கின் அடிப்பகுதியில் வர வாய்ப்பு உள்ளது. இந்த இடத்தில் வரும் புற்றுநோய்க்கும் அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ளப்படும். இன்றைய நவீன சிகிச்சை முறையில் நிறைய முதல்தரமான சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.உதாரணமாக, வாய்ப்புற்று நோய்க்கு அறுவைசிகிச்சையே பிரதானமாக இருப்பதால், முகத் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால், இந்த புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவரும் உடன் இருப்பார். அதனால், முடிந்தளவு முகத்தோற்றம் மாறாமல், பழையபடி முகத்தை கொண்டு வந்துவிட முடியும்.

அதுபோன்று வாய்ப்புற்றுநோயை பொருத்தவரை, ஸ்டேஜ் அதிகமாக அதிகமாக நெறிகட்டிகள் தோன்றும். அந்த நெறிகட்டிகள் வரை புற்றுசெல்கள் பரவி விட்டால், அது உடலின் வேறு எந்த பகுதிக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, நுரையீரல், எலும்பு, கல்லீரல் போன்று எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் பரவலாம். அப்படி பரவிவிட்டால், சிகிச்சை மேற்கொள்வது மிகவும் கடினம்.

தொண்டை, தொண்டை பின் பகுதி, தொண்டை முன்பகுதி போன்றவற்றில், ஏற்படும் புற்றுநோய் பொதுவாக மூன்றாவது ஸ்டேஜ் வரை இருந்தாலும் ரேடியோ தெரபி மூலமே சரி செய்துவிட முடியும். அதன் பின் கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்படும். புகையிலையை வாயில் அடக்கி வைக்கும். பல்லுக்கும் தாடைக்கும் இடைப்பட்ட பகுதியில் வரும் புற்றுநோயே அதிகமாக காணப்படுகிறது. அதற்கு அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ளப்படும். பின்னர் ரேடியோ தெரபி சிகிச்சை தரப்படும். இதிலேயே எக்ஸ்-ரே தெரபி போன்ற அடவான்ஸ்ட் சிகிச்சை முறைகளும் தற்போது வந்துவிட்டன.

முதல் ஸ்டேஜில் ஒருவர் இருந்தால், அவருக்கு அறுவை சிகிச்சையே போதுமானது. ஸ்டேஜ் 2 – 3 க்கு மேல் இருந்தால், அறுவை சிகிச்சைக்குப் பின் ரேடியோ தெரபி சிகிச்சை, கீமோ தெரபி போன்றவை அளிக்கப்படும். இதுதவிர, தற்போது ஐஎம்ஆர்டி சிகிச்சை முறை, ரேபிடார் சிகிச்சை முறை போன்ற அட்வான்ஸ்ட் சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், தற்போது லேட்டஸ்ட்டாக இம்னோ தெரபி சிகிச்சை முறையும் அளிக்கப்படுகிறது. இதுவும் கீமோ தெரபி போன்று ஊசிமூலம் மருந்து செலுத்தி அளிக்கப்படும் சிகிச்சை முறையாகும். இது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன்கொண்டது. இது கொஞ்சம் விலை அதிகமான சிகிச்சை முறையாகும். ஆனால், சில மருத்துவக் காப்பீடு இருந்தால் இதை எடுத்துக் கொள்ளலாம்.

தொண்டைப் புற்றுநோயினால் குரல்வளை பாதிக்கப்பட்டு பேசமுடியாத நிலையில் இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இசாபேஜேல் சிகிச்சை மூலம் அவர்களுக்கு மீண்டும் பேசுவதற்கு பயிற்சியளிக்கப்படும். அதன்பின், ஸ்பீச் தெரபி போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படும். இதன்மூலம், மீண்டும் பேச வைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.அறுவைசிகிச்சைக்குபின் தற்காத்துக்கொள்ளும் முறைகள் எந்தவொரு புற்றுநோய்க்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு பூரண குணமடைந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. அவர்கள் வாழும் காலம் வரை மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

உதாரணமாக, ஒருவருக்கு புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், அவர்கள் இரண்டு ஆண்டுகள்வரை, இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், முதல் இரண்டு ஆண்டுகளில் மீண்டும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டால், மீண்டும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிககுறைவு. அதுவே, ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டால், அதன்பின் பெரிதாக பயம் இல்லை. ஆனாலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறையாவது பரிசோதனைகள் செய்து கொள்வதுஅவசியமாகும்.

அதுபோன்று புற்றுநோய் சிகிச்சை முடிந்து குணமானதும் சிலர் நாம் பூரண குணமடைந்துவிட்டதாக நினைத்து கொண்டு, மீண்டும் புகையிலை போடும் பழக்கத்தை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர். அவ்வாறு செய்தால், மீண்டும் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகான உணவு முறை

பொதுவாக, வாய்ப்புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு, தண்ணீர் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். அதனால் தண்ணீர் நிறைய அருந்த வேண்டும்.
ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் நிறைந்த விட்டமின் ஏ, விட்டமின் சி சத்துக்கள் உள்ள பழங்கள், காய்கறிகள் நிறைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலும், சிட்ரஸ் நிறைந்த பழங்கள் மிகவும் நல்லது. மேலும், கொய்யாப்பழம், கிவிப்பழம், அத்திப்பழம், கிரீன் ஆப்பிள், பப்பாளி போன்றவை அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமானது மீண்டும் அவர்கள் புகையிலையை தொடவே கூடாது.

பொதுவாக வாய்ப்புற்றுநோயை பொருத்தவரை, பெரும்பாலும் ஆரம்பநிலையிலேயே அறிகுறிகள் தென்பட தொடங்கிவிடும். இருந்தாலும், புகையிலைப் பழக்கத்தை கைவிட முடியாமல், பலர் அதனை அலட்சியப்படுத்திவிட்டு, கடைசியில் முற்றிய நிலையிலேயே வருகிறார்கள். இதுபோன்று வரும்போது சிகிச்சை அளிப்பதும் சிரமம், அவர்கள் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது. எனவே, எந்தவொரு அறிகுறிகள் தென்பட்டாலும், அவை ஓரிரு வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

இந்தியாவைப் பொருத்தவரை தென் மாநிலங்களைவிட, வட மாநிலங்களான அசாம், மிசோரம், உத்தரபிரதேஷ், ஜார்கண்ட் போன்ற நார்த்ஈஸ்ட் மாநிலங்களில் ஆண், பெண் இருபாலினருக்குமே இந்த வாய்ப்புற்றுநோய் பரவலாக காணப்படுகிறது. அங்கு பெண்களும் அதிகளவு புகையிலை பயன்படுத்துவதால், அந்த மாநிலங்களில் பெண்களும் அதிகம் பாதிக்கின்றனர்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post வாய்ப்புற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்வோம்! appeared first on Dinakaran.

Related Stories: