ருமெட்டிக் காய்ச்சல் அறிவோம்!

நன்றி குங்குமம் டாக்டர்

டைபாய்டு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், நிமோனியா காய்ச்சல் என மக்களை வாட்டும் பலவகையான காய்ச்சல்கள் அவ்வப்போது பலருக்கும் ஏற்படுவது உண்டு. அந்தவகையில், ருமெட்டிக் காய்ச்சலும் ஒன்று. இந்த காய்ச்சல் குழந்தைகளை பாதிக்கும் ஒருவகையான தொற்று காய்ச்சலாகும். இது மூட்டுகளில் தொடங்கி இதயத்தை பாதிக்கும் காய்ச்சலாகும். ருமெட்டிக் காய்ச்சல் என்றால் என்ன, அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இதய அறுவைசிகிச்சை நிபுணரான மருத்துவர் குரு பிரசாத்.

ருமெட்டிக் காய்ச்சல் என்றால் என்ன..

ருமெட்டிக் காய்ச்சல் என்பது சுகாதாரமற்ற இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் தொண்டை அழற்சி நோயாகும். இது மூட்டுகளில் தொடங்கி இதயத்தை பாதிக்கக்கூடியது. எனவே, இதனை ருமெட்டிக் இதய நோய் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்ட்ரெப்டோகாக்கல் என்ற பாக்டீரியா கிருமி தொற்றினால் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.

இந்த காய்ச்சல் பெரும்பாலும் 5 முதல் 15 வயதக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கும். இது எதனால் ஏற்படுகிறது என்றால், வாய் சுத்தம் இல்லாது இருத்தல், சுகாதாரமற்ற சுற்றுச்சூழலில் வசிப்பது, சுகாதாரமற்ற கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் இருப்பது, சுகாதாரமற்ற தண்ணீரை அருந்துவது போன்றவற்றினால் ஏற்படுகிறது. பொதுவாக, குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருளை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இதனால், குழந்தைகளின் வாய்க்குள்ளே நிறைய பாக்டீரியாக்கள் உருவாகும். அந்த வகைகளில் ஒன்றுதான் ஸ்ட்ரெப்டோகாக்கல் பாக்டீரியா. தொண்டைப்பகுதியில் தொற்றினை ஏற்படுத்தும் பீட்டா ஹிமோலைடிக் ஸ்ட்ரெப்டோகாக்கல் என்ற பாக்ட்டீரியவால் இந்தநோய் ஏற்படுகிறது.

இந்த கிருமி தொற்று முதலில் கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தி மூட்டுகளை அசையவிடாமல் பாதிக்கிறது. இதன் தாக்கம் அதிகரிக்கும்போது இதயத்தில் உள்ள ரத்தநாளங்கள் எனும் வால்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, இந்த பாக்டீரியா தொற்றின் தாக்கத்தால், இதய வால்வுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம் அல்லது வால்வுகள் சுருங்கி மூடிவிடும் அபாயம் ஏற்படலாம். திடீரென்று இதய வால்வு ஒரு பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் தழும்பு மாதிரி சுருங்கி மூடிக்கொண்டால், அந்தவழியாக செல்லும் ரத்தமானது செல்ல முடியாமல் ஓரிடத்தில் தேங்கிவிடும். அல்லது ரத்தக் கசிவு ஏற்படும். இதனால்தான் இந்த காய்ச்சல் ஏற்படும்போது குழந்தைகளால் எழுந்து நடக்கக் கூட முடியாதளவிற்கு மூட்டுகளில் கடுமையான வலி இருக்கும்.

இந்தியாவை பொருத்தவரை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த ருமெட்டிக் காய்ச்சலால் இதயபாதிப்புகள் அதிகளவில் இருந்து வந்தது. ஆனால், சமீபகாலமாக இந்த ருமெட்டிக் காய்ச்சல் அவ்வளவாக வருவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே இருந்தாலும் ரீமோட் ஏரியா என்று சொல்லப்படும் குக்கிராமங்கள், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில், மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் புழுங்குபவர்கள் போன்ற ஒரு சிலருக்கு ஏற்படலாம். ஆனால், அதுவும் குறைவான அளவில்தான் இருக்கிறது.

அறிகுறிகள்

பெரும்பாலும் ருமெட்டிக்காய்ச்சல் தொற்று இருப்பதை பலரும் ஆரம்பநிலையில் உணர மாட்டார்கள். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும்போதுதான் மற்ற உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தி பல அறிகுறிகளை உண்டு பண்ணுகிறது. இது குழந்தையின் உடலின் எந்த பகுதியை நோய் தாக்குகிறது என்பதை பொறுத்து அறிகுறிகள் பரவலாக மாறுபடலாம். ருமெட்டிக் காய்ச்சல் தீவிரமாக இருக்கும் நிலையில் சில அறிகுறிகள் தென்படும். உதாரணமாக, ருமெட்டிக் காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று சொறி. தட்டையாகவும் ஒழுங்கற்ற விளிம்புகளுடன் சிவப்பு நிறமாகவும் தோல் காணப்படும்.

பிற பொதுவான ருமாட்டிக் காய்ச்சல் அறிகுறிகள்.

*இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் காய்ச்சல்
*தொண்டையில் வலி
*விழுங்குவதில் சிரமம்​

*குழந்தையின் முழங்கால்கள், கணுக்கால் மற்றும் முழங்கைகளில் வீக்கம் ஏற்படுவது.
*கைகள், கால்கள் அல்லது பிற உடல் பாகங்களை அசைக்க முடியாத நிலை.
*குழந்தையின் தோலின் கீழ் சிறிய புடைப்புகள்

*மார்பு வலி அல்லது அசாதாரன இதயத்துடிப்பு
*அதிக சோர்வு
*விவரிக்க முடியாத அல்லது தொடர்ந்து வரும் தலைவலி

*தசை வலிகள்
*வீக்கம்
*குமட்டல்

*சிவப்பு டான்சில்ஸ்
*வயிறு அல்லது மார்பில் ஏற்படும் வலி
*மூக்கில் ஏற்படும் ரத்தக்கசிவு
*உடலில் எங்கேனும் தடிப்புகள் அல்லது கட்டிகள்
*மூட்டுகளை சார்ந்த மாற்றங்கள்

போன்றவை பொதுவான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஒருமுறை ருமெட்டிக் காய்ச்சல் ஏற்பட்டுவிட்டால் அதன் அறிகுறிகள் ஆண்டுக்கணக்கில் கூட நீடிக்கும். ருமாட்டிக் காய்ச்சல் சில சூழ்நிலைகளில் நீண்ட கால சிக்கல்களை கூட உண்டு செய்யும். அதில் ஒன்றுதான் ருமாட்டிக் இதய நோய்.​

சிகிச்சைமுறைகள்

இந்த ருமெட்டிக் காய்ச்சலுக்கான சிகிச்சை முறை என்றால் அது, பென்சிலின் ஊசி போட்டுக் கொள்வதுதான். மேலும், மூட்டுகளில் வலி அதிகம் இருக்கும் என்பதால் பெயின் கில்லர் மருந்துகள் கொடுக்கப்படும். இந்த காய்ச்சல் அதிகரித்து இதயத்தை பாதித்திருந்தால் முதலில் ஆஸ்பிரின் கொடுக்கப்படும். அதுவே பாதிப்பு அதிகரித்து இதய வால்வு சுருங்கிவிட்ட நிலையில் இருந்தால், அறுவைசிகிச்சை மூலம் சுருங்கிய வால்வு பகுதியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் செயற்கை வால்வை பொருத்துவோம்.

ஆனால், இதில் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த ருமெட்டிக் காய்ச்சலை பொருத்தவரை, பொதுவாக சிறுவயதில் காய்ச்சல் ஏற்பட்டு சரியாகி இருந்தாலும் அது இதய வால்வுகள் வரை பாதித்திருந்தால், அந்த குழந்தைக்கு வயதான பின்பும் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. ஒருவருக்கு ருமெட்டிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் எந்த வயதில் பாதித்திருந்தாலும், குறைந்தபட்சம் அவர்களது 40 வயது வரை மூன்று வாரத்திற்கு ஒருமுறை பென்சிலின் ஊசியை போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். அல்லது பென்சிலின் மாத்திரைகள் தினமும் உட்கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு வயதான காலத்தில், கொஞ்ச தூரம் நடந்தாலும் மூச்சு வாங்குவது, மூச்சுத் திணறல் ஏற்படுவது, வியர்வை அதிகம் சுரப்பது, கால் வீக்கம், உடலில் வீக்கம் ஏற்படுவது, இதய துடிப்பில் மாறுபாடு போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகளுடன் வரும்போது, அவர் தற்போது என்னநிலையில் இருக்கிறார் என்று கண்டறிந்து அதற்கு தகுந்தவாறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

தற்காத்துக் கொள்ளும் வழிகள்

சுற்றுசூழலை சுத்தமாக வைத்துக் கொள்வது, வாய் சுத்தத்தை கடைபிடிப்பது. குழந்தைகள் குழுவாக இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது. சுத்தத்தின் அவசியம் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத் தருதல்.சுத்தமற்ற இடங்களில் வசிப்பதும், சுகாதாரமற்று இருப்பதுமே இந்த பாக்டீரியா பரவக் காரணமாகும். எனவே, சுற்றுசூழலையும், வாய் சுகாதாரத்தை கடைபிடித்தாலே இந்த ருமெட்டிக் காய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post ருமெட்டிக் காய்ச்சல் அறிவோம்! appeared first on Dinakaran.

Related Stories: