ஒன்றிய பாஜ ஆட்சியில் பொதுவுடமைகள் அனைத்தையும் தனிவுடமையாக மாற்றுகின்றனர்: நடிகர் ராஜேஷ் பேச்சு

பெரம்பூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், அகரம் ஜெயின் பள்ளி வளாகத்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர் தலைமையில் ‘அறமே தமிழர் அரசியல், அதுவே தலைவர் வாழ்வியல்’ என்னும் தலைப்பில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் சிவசங்கரி, நடிகர் ராஜேஷ், பட்டிமன்றம் புகழ் ராஜா, கவிஞர் கவிதா ஜவகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப்.முரளிதரன், நாகராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேசியதாவது: ஒரு குறிப்பிட்ட வயது வந்தால், பெண் பிள்ளைகளை அவர்களின் குடும்பத்தினர் கல்யாணம் செய்து வைத்து விடுவர். இதை தடுக்க, கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கி படிப்பிற்கு ஊக்கம் அளித்து வரும் திட்டம்தான் புதுமைப்பெண் திட்டம். பெண்கள் மட்டுமல்ல, ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டம். கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்பது வருங்கால தலைமுறையினர் மேலும் மேலும் படிக்க வேண்டும் என்பதற்கு உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் கோவை, நெல்லை போன்ற நகரங்களும் விரிவுபடுத்த வேண்டும்.

நடிகர் ராஜேஷ் பேசியதாவது: மத சம்பந்தமான சண்டைகள் இந்தியாவின் எதிர்காலத்தையே பாதிக்கும். கடவுள் என்பது தனி உடமை, அதனை பொதுவுடமை ஆக்க கூடாது. ஆனால் இந்தியாவில் பொதுவுடமைகளை எல்லாம் ஒன்றிய பாஜ அரசு தனி உடமைகளாக மாற்றி வருகிறது. திமுகவை அழிக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். யாரையும் யாராலும் அழிக்க முடியாது. யூதர்களை அழிக்க வேண்டும் என ஹிட்லர் நினைத்தார். ஆனால் இன்று உலகத்தையே யூதர்கள் தான் ஆண்டு வருகின்றனர். இதிலிருந்து ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். எதை நாம் போட்டு நசுக்குகிறோமோ அதுதான் மேலே வளர்ச்சி பெற்று வரும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஒன்றிய பாஜ ஆட்சியில் பொதுவுடமைகள் அனைத்தையும் தனிவுடமையாக மாற்றுகின்றனர்: நடிகர் ராஜேஷ் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: