ராஜிவ் காந்தி ஜோதி யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கோரிக்கை

சென்னை: ராஜிவ் காந்தி ஜோதி யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ராஜிவ் காந்தி ஜோதி யாத்திரை கமிட்டி தலைவர் எம்.சாமுவேல் திரவியம் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பிரதமர் தலைவர் ராஜிவ் காந்தியின் ஜோதி அவரது நினைவு நாளில் பெரும்புதூரில் இருந்து தொடங்கி அவரது பிறந்தநாளில் டெல்லி தரைவழி மார்க்கமாக எடுத்துச் செல்வது வழக்கம்.

தமிழகத்தில் இருந்து எனது தலைமையில் 3ம் ஆண்டாக வருகிற 15ம் தேதி காலை 9 அணி அளவில் கன்னியாகுமரி ரவுண்டானா அருகில் உள்ள ராஜிவ் காந்தி சிலையில் இருந்து தொடங்கி 44 மாவட்டங்கள் வழியாக ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி நினைவிடத்திற்கு வருகிற 21ம் தேதி காலை வந்தடைந்து, பின்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடமும் மற்றும் முன்னணி தலைவர்கள் முன்னிலையில் ஒப்படைத்து மரியாதை செலுத்தப்படும். மேலும் இந்த ஜோதியில் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் 50 பேருடன் 5 வாகனங்களில் தரைவழி மார்க்கமாக 64 மாவட்டங்கள் வழியாக கடந்து செல்கிறது. எனவே தாங்கள் இந்த புனித ஜோதிக்கு அனுமதி தர வேண்டி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

The post ராஜிவ் காந்தி ஜோதி யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: