மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ; ராட்சத திரையில் ஒளிபரப்பு: ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் பார்க்கலாம்

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மெகா திரையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் வரை அமர்ந்து ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் போர்டு ‘ஐபிஎல் ரசிகர் பூங்கா’ என்ற பெயரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதற்காக பிசிசிஐ மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தை தேர்வு செய்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்துதலின்பேரில் 24 ஏக்கர் பரப்பளவு உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இங்கு ஏற்கனவே ஹாக்கி, கபடி, வாலிபால், கால்பந்து உள்ளிட்ட பிரத்யேக மைதானங்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு ராட்சத திரையில் ஐபிஎல் போட்டிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன. இதற்கான பணிகள் முழுவீச்சில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இங்கு ராட்சத திரை வைப்பதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் 3,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கிரிக்கெட் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இந்தியாவில் உள்ள 27 நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. டிக்கெட் கட்டணம் இல்லை. அனைவரும் இலவசமாக கண்டு ரசிக்கலாம். பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ரசிகர்கள் பார்வையிடலாம். உச்சநீதிமன்ற உத்தரவுபடி போட்டி முடியும் வரை திரையிடல் தொடரும். ​​

இரவு 10 மணிக்கு சத்தம் நிறுத்தப்படும். இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சம் 32க்கு 18 என்ற அளவிலான ராட்சத திரையில் கிரிக்கெட் போட்டி நேரடியாக திரையிடப்படும். உணவு மற்றும் பானங்கள் ஸ்டால்களில் சிக்கனமாக விற்கப்படும். குழந்தைகளின் பொழுதுபோக்கிற்கும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் துவக்க போட்டியான மார்ச் 22 முதல் இறுதிப்போட்டி வரை தொடர்ந்து போட்டிகளை கண்டு களிக்கலாம்’’ என்றார்.

The post மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ; ராட்சத திரையில் ஒளிபரப்பு: ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் பார்க்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: