பறக்கும் படை சோதனையில் ₹86 ஆயிரம் சிக்கியது

பண்ருட்டி, மார்ச் 19: பண்ருட்டியில் பறக்கும் படை சோதனையில் ரூ.86 ஆயிரம் சிக்கியது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்று பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட தொடங்கிவிட்டனர். இதற்காக பண்ருட்டியில் 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை சென்னை சாலை பணிக்கன்குப்பம் பாலம் அருகே பறக்கும் படை தோட்டக்கலைதுறை அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர் எந்தவித ஆவணமும் இன்றி ரூ.86 ஆயிரம் எடுத்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் கண்டரக்கோட்டை ஏரிப்பாளையத்தை சேர்ந்த தியாகராஜன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பறக்கும் படையினர் ரூ.86 ஆயிரம் பறிமுதல் செய்துதாசில்தார் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.

The post பறக்கும் படை சோதனையில் ₹86 ஆயிரம் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: