இப்போது ஈ சாலா கப் நம்மது: கேப்டன் ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி

புதுடெல்லி: 5 அணிகள் பங்கேற்ற 2வது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த இறுதி போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி 18.3 ஓவரில் 113 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 44ரன் அடித்தார். பெங்களூரு பவுலிங்கில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 சோஃபி மோலினக்ஸ்3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 31, சோஃபி டெவின் 32, எல்லிஸ் பெர்ரி நாட் அவுட்டாக 35, ரிச்சா கோஷ் 17 ரன் அடிக்க 19.3ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு கோப்பையுடன் ரூ.6 கோடி பரிசு வழங்கப்பட்டது.

கடந்த சீசனிலும் பைனலில் மும்பையிடம் தோல்வி அடைந்த டெல்லி இந்த முறையும் கோப்பையை தவறவிட்டது. அந்த அணிக்கு ரூ.3 கோடி கிடைத்தது. ஆட்ட நாயகி விருதை பெங்களூருவின் சோஃபி மோலினக்ஸ், தொடர் நாயகி விருதை உ.பி.வாரியர்சின் தீப்தி சர்மா (295 ரன், 10 விக்கெட்) பெற்றனர். வெற்றிக்கு பின் ஆர்சிபி கேப்டன் மந்தனா கூறியதாவது: இந்த வெற்றியை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த வெற்றியை உணர்வதற்கு எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் என நினைக்கின்றேன். ஏனென்றால் நான் மிகுந்த உற்சாக மிகுதியில் இருக்கிறேன். என்னால் பேசவே முடியவில்லை.

நான் எனது அணி வீராங்கனைகளை நினைத்து பெருமை கொள்கின்றேன், பெங்களூருவில் விளையாடிய போட்டிகள் எங்களுக்கு நன்றாக இருந்தது. டெல்லிக்கு வந்ததும் நாங்கள் 2 மோசமான தோல்விகளை சந்தித்தோம். அப்போது சரியான நேரத்தில் முன்னேற வேண்டும் என்று பேசினோம். கடந்த ஆண்டு எங்களுக்கு எது சரி, எது தவறு என்பது போன்ற நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தது. அணி நிர்வாகத்திற்கு தம்ஸ் அப். நான் மட்டும் கோப்பையை வெல்லவில்லை. மொத்த அணியும் கோப்பையை வென்றது. இது என்னுடைய டாப் 5 வெற்றியில் ஒன்றாக இருக்கும். உலகக்கோப்பை முதலாவதாக இருக்கலாம். ஆர்சிபி ரசிகர்களிடமிருந்து ஈ சாலா கப் நம்தே என்ற ஒரு கருத்து எப்போதும் வந்து கொண்டிருக்கும். இனிமேல் அது ஈ சாலா கப் நம்மது. கன்னடம் என்னுடைய மொழி கிடையாது. ஆனால் இதை ரசிகர்களுக்கு சொல்ல விரும்புகிறேன், என்றார்.

The post இப்போது ஈ சாலா கப் நம்மது: கேப்டன் ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: