பிரின்ஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா; தமிழில் பேச தயங்க கூடாது: சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு

சென்னை: சென்னையை அடுத்த பொன்மார் பிரின்ஸ் வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியின் 18வது பட்டமளிப்பு விழா மற்றும் டாக்டர் கே.வாசுதேவன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் முனைவர் கே.வாசுதேவன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் முனைவர் வா.விஷ்ணு கார்த்திக், வா.பிரசன்னா வெங்கடேஷ், செயலாளர் வா.ரஞ்சனி, கல்லூரிகளின் முதல்வர்கள் டாக்டர் ஜி.இந்திரா, டாக்டர் டி.சுந்தர் செல்வின், துறையின் தலைவர் வி.மகாலட்சுமி முன்னிலை வகித்தனர்.

விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்கலைக் கழக அளவில் ரேங்க் எடுத்த மாணவன் சுதீஸ், மாணவி ஆஷ்லின் லிப்டி உள்பட 300 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது;
பட்டம் பெறுவதில் இருந்துதான் உங்களின் வாழ்க்கை துவங்குகின்றது. எளிதாக இருந்த வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருக்கும். அதை நீங்கள் வலிமையுடன் எதிர்கொண்டு போராடவேண்டும். பெற்றோரும் இச்சமூகமும் உங்கள்மீது அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. அதனை நீங்கள் முழுமையாக நிறைவேற்றவேண்டும். உங்களின் உயரிய லட்சியங்களை நீங்கள் அடைய போராடும்போது தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு இடையூறுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். அவைகளை நீங்கள் திறமையுடன் கையாண்டு உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் முன்னேற வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் நீங்கள் சென்று பணிபுரிந்தாலும் உங்களின் கல்வி மற்றும் ஆற்றலை நம் தேசத்தின் வளர்ச்சிக்காக முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

நம் தாய்மொழியான தமிழை நீங்கள் போற்றி பாதுகாக்க வேண்டும், எத்தனை மொழிகளை நீங்கள் கற்று அறிந்தாலும் தயக்கமின்று வாய்ப்பு உள்ளபோது எல்லாம் தமிழை நீங்கள் பயன்படுத்த வேண்டும். தமிழை பயன்படுத்தவும் பேசவும் தயங்க கூடாது. நம் மொழியின் தொன்மையையும் பெருமையையும் நீங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும், தாய் மொழியால் மட்டுமே உங்களின் சிந்தனை திறன் வளரும். இவ்வாறு பேசினார்.

விழாவில், கல்லூரியின் கல்வி ஆலோசனை குழு உறுப்பினர்கள் கே.பார்த்தசாரதி, மாநில கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் எஸ்.ரகு, ஏ.என்.சிவப்பிரகாசம், எம்.தருமன், பி.ஆர்.ரவிராம் கலந்துகொண்டனர்.

The post பிரின்ஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா; தமிழில் பேச தயங்க கூடாது: சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: