போரில் கொல்லப்பட்ட பெண்கள் எண்ணிக்கையை விட மோடி ஆட்சியில் அதிக அளவில் பெண்கள் கொல்லப்படுகிறார்கள் :பிருந்தா காரத் தாக்கு

சென்னை : ஊழல்வாதிகளை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணத்தை பெறுவதற்காக புலனாய்வு அமைப்புகளை மோடி தவறாக பயன்படுத்தி வருவதாக சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம் சாட்டி உள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் மாநில உரிமை மற்றும் மகளிர் உரிமை குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் எந்த அளவிற்கு சீர் குலைந்துள்ளது என்பது அனைவர்க்கும் தெரிய வந்துள்ளதாக கூறினார். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அதிக நிதியை பாஜக பெற்று இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், மோடி அரசு மக்களை வஞ்சித்துவிட்டதாகவும் சாடினார்.

ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்டு, ஆனால் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை சோதனைகள் மூலம் அச்சுறுத்தி ஊழல் செய்தவர்களிடம் இருந்து பாஜக ஏராளமான பணத்தை பெற்றுள்ளதாகவும் பிருந்தா காரத் சாடியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் எனக்கு உதவுங்கள் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்ற அடிப்படையில் கூட்டுக் களவாணி வேலையைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக செய்துள்ளது;10 ஆண்டுக் கால பாஜக மோடி ஆட்சியில் எரிபொருட்கள் மீதான வரிகளில் ₹28 லட்சம் கோடியை பிக் பாக்கெட் அடித்துள்ளார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாத தமிழ்நாடு முதலமைச்சர் எனது சகோதரர் மு.க ஸ்டாலின் மற்றும் கேரளா முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் ஆகியோருக்கு நினைத்துப் பெருமையடைகிறேன். போரில் கொல்லப்பட்ட பெண்கள் எண்ணிக்கையை விட மோடி ஆட்சியில் அதிக அளவில் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 28% அதிகரித்துள்ளது. மக்களவை மற்றும் மாநில சட்ட சபைகளில் பெண்களுக்கு 3ல் 1 பங்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அமல்படுத்துவதை ஒத்திவைப்பதன் மூலம் மோடி அரசு பெண்களை வஞ்சித்து விட்டது, “இவ்வாறு பேசினார்.

The post போரில் கொல்லப்பட்ட பெண்கள் எண்ணிக்கையை விட மோடி ஆட்சியில் அதிக அளவில் பெண்கள் கொல்லப்படுகிறார்கள் :பிருந்தா காரத் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: