நத்தம் கரியச்சேரி அரசு பள்ளிக்கு ரூ.63 லட்சம் மதிப்பில் கூடுதல் பள்ளி கட்டிடம்: அணுமின் நிலைய இயக்குநர் திறந்து வைத்தார்

திருக்கழுக்குன்றம்: நத்தம் கரியச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, அணுமின் நிலையம் சார்பில் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டிடத்தினை அணுமின் நிலைய இயக்குநர் சுதிர் பி.ஷெல்கே திறந்து வைத்தார். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தம் கரியச்சேரி ஊராட்சியில், அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளி கட்டிடம் பல ஆண்டுகளாக பழுதடைந்தும், போதிய வகுப்பறை வசதியின்றியும் உள்ளதால், புதிய கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் சேகர், கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலைய இயக்குநரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளார். இக்கோரிக்கையின்படி, சென்னை அணுமின் நிலையம் சார்பில் ரூ.63 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2 வகுப்பறைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு நத்தம் கரியச்சேரி ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் ஒன்றிய தலைவருமான கரியச்சேரி சேகர் தலைமை தாங்கினார். அணுமின் நிலைய மனிதவள துணை பொது மேலாளர் வாசுதேவன், நிறுவன சமூக பொறுப்புக்குழு தலைவர் சுபா மூர்த்தி, தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்க பொது செயலாளர் கருணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமையாசிரியை சரஸ்வதி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை அணுமின் நிலைய இயக்குநர் சுதிர் பி.ஷெல்கே கலந்துகொண்டு, ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கூடுதல் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், ஊராட்சி மன்ற துணை தலைவர் சூர்ய பிரபா உமாசங்கர், ஊராட்சி செயலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post நத்தம் கரியச்சேரி அரசு பள்ளிக்கு ரூ.63 லட்சம் மதிப்பில் கூடுதல் பள்ளி கட்டிடம்: அணுமின் நிலைய இயக்குநர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: