மாதவிடாய் வலியை குறைக்க எளிய வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மாதவிடாய் காலத்தில் கருப்பை வாய்ப்பகுதி சுருங்கி விரியும். அதனால் அந்த காலகட்டத்தில் ஒரு சில பெண்களுக்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்படலாம். சிலர் அந்த வலியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் பயன்படுத்துவார்கள். மாத்திரைகள் பயன்படுத்துவதால் தற்காலிகமாக மட்டுமே வலி குறையுமே தவிர, நிரந்தர பலன் தராது. அதேபோல மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள் இன்னும் மோசமானவை.. அதனால் உணவு மற்றும் சில எளிய வீட்டு வைத்தியங்களின் மூலம் வலியைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

மாதவிடாய் காலகட்டத்தில் உடலில் எனர்ஜி குறைந்து காணப்படும். எனவே, அந்தசமயத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். அது வலியை குறைக்க பெரிதும் உதவி செய்யும். சிலர் அவ்வப்போது காபி குடித்தால் வயிற்று வலி குறையும் என்று நினைத்து அடிக்கடி காபி, டீ குடிப்பார்கள். இது மிக மிக தவறு. காஃபைன் சேர்த்த பானங்கள் அதிகமாக குடிப்பதைத் தவிர்த்தாலே வலி கட்டுக்குள் வரும்.

மாதவிடாய் வலியைக் குறைக்க மிகச்சிறந்த வழிகளில் ஒன்று வெந்நீர் ஒத்தடம். ஹாட் வாட்டர் ஹீலிங் பேடுகள் (hot water healing pads) கடைகளில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி வலியுள்ள அடிவயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். இதற்கு அதிக சூடு இல்லாமல் வெதுவெதுப்பாக உள்ள நீரையே பயன்படுத்த வேண்டும். வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் மென்மையானவை. அவற்றை பாதிக்காதவாறு கொடுப்பது நல்லது.

சோம்பு, இஞ்சி, இலவங்கப்பட்டை உள்ளிட்டவற்றை தனித்தனியாக டீயாக செய்தோ அல்லது ஒன்றாக சேர்த்து நீரில் கொதிக்க வைத்து மூலிகை டீயாகவோ அருந்தலாம். இதில், ஆன்டி – இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருக்கும். அதோடு அவற்றிலுள்ள ஆன்டி – பாஸ்மோடிக் மூலக்கூறு பண்புகள் தசைப்பிடிப்புகளைச் சரிசெய்யும்.

மாதவிடாய் காலங்களில் யோகா செய்யக் கூடாது என்று தவறான கருத்து உண்டு. ஆனால் மாதவிடாய் கால வலி மற்றும் மனநிலை மாற்றங்களைச் சரிசெய்வதில் யோகா மிகச்சிறந்த ஹீலிங் தெரபி என்றே சொல்லலாம். மாதவிடாய் காலங்களிலும் சிலர் கடுமையான வேலைகளைச் செய்வார்கள். அதை தவிர்க்க வேண்டும். அதுபோன்று அதிக கனமான பொருட்களை தூக்குவதும் செய்யக்கூடாது.

மஞ்சளில் பயோ – ஆக்டிவ் மூலக்கூறுகளும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளும் அதிகம். இவை மாதவிடாய் வலியை உடனடியாகக் குறைக்கக்கூடிய வலிமை கொண்டவை. எனவே, ஒரு டம்ளர் வெந்நீரில் 2 சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து அவ்வப்போது குடித்து வர, மாதவிடாய் வலி கட்டுக்குள் வரும்.மாதவிடாய் சமயத்தில் வெந்நீர் குளியல் நல்லது. இது வயிற்று வலி, தசைப்பிடிப்புகளைக் குறைப்பதோடு மட்டுமின்றி அந்த நாட்களில் ஏற்படும் மூட் ஸ்விங்கையும் கட்டுப்படுத்தும்.

தொகுப்பு: ரிஷி

The post மாதவிடாய் வலியை குறைக்க எளிய வழிகள்! appeared first on Dinakaran.

Related Stories: