கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

ஹிட்லர் தெரியும்… சிஃபிலிஸ் தெரியுமா?

நாராயணன் நான் அடிக்கடி சந்திக்கும் நோயாளி. அவரது மனைவியும் குழந்தையும் என்னிடம் அடிக்கடி சிகிச்சைக்கு வருவார்கள். நாராயணனோ கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயால் அவதிப்படுபவர். இருந்தும் சரியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள மாட்டார். கூடவே குடிப்பழக்கமும் அவருக்கு உண்டு. சில வாரங்களுக்கு முன்பாக, ‘‘கடந்த இரண்டு நாட்களாக வலது கண்ணில் பார்வை சரியாகத் தெரியவில்லை” என்று கூறினார். பரிசோதித்துப் பார்க்கையில் விழித்திரைக்கு ரத்தத்தைக் கொண்டு வரும் முக்கிய ரத்தநாளமான central retinal arteryயின் ஒரு பிரிவு அடைத்திருந்தது தெரிந்தது. அதனால் உடனடியாக வேறு சில பரிசோதனைகளுக்கு அவரை உட்படுத்தினோம்.

ரத்த நாள அடைப்பினால் OCT பரிசோதனையில் விழித்திரையின் ஒரு பகுதியில் லேசாக வீக்கம் காணப்பட்டது. ரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடுதலாக இருந்தது. கூடவே இதயத்திலும் மிக லேசான பாதிப்பு. உடலில் எந்த வகை ரத்த நாளங்களில் அடைப்பாக இருந்தாலும் இன்றைய சூழலில் மருத்துவரின் மனதில் இதற்கு வாழ்வியல் நோய்கள் காரணமாக இருக்கலாமோ என்ற எண்ணம்தான் முதலில் எழுகிறது. சர்க்கரை, அதீத ரத்தக் கொழுப்பு, இதய நோய்கள் போன்றவற்றால் கண்களிலும் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம். இருந்தாலும் பிற காரணங்களையும் நாம் ஒதுக்கி விட முடியாது.

அதனால் வழக்கமாக விழித்திரையில் ரத்த நாள அடைப்பு வந்தால் செய்யக்கூடிய பரிசோதனைகளை நாராயணனுக்குச் செய்தோம். ‘இவற்றில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கிறதா என்று பார்ப்போம் அல்லது இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடர்பான பிரச்னைதான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு சிகிச்சை கொடுப்பது ஒரு புறம் இருந்தாலும் அதன் காரணத்தைக் கண்டுபிடித்து சரி செய்தால்தான் இதே அடைப்புப் பிரச்னை உடலில் வேறு பகுதிகளில் வருவதைத் தடுக்க முடியும்’ என்று நாராயணனிடம் விளக்கம் அளித்தோம்.

இந்தப் பரிசோதனைகளின் ஒரு பகுதியாக செய்யப்பட்ட Mantoux பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் என்ற அறிக்கை வந்தது. என்றாவது உங்களில் ஒருவருக்கு மேன்டோ பரிசோதனை செய்திருக்கக்கூடும். முன்னங்கையில் தோலுக்குக் கீழே சுமார் 0.1 மில்லிலிட்டர் அளவிற்கு ஒரு மருந்தை ஊசி மூலமாக செலுத்துவார்கள். சரியாக 48 மணி நேரம் கழித்து ஊசி போட்ட இடத்தில் சிறிய ஸ்கேலால் அளந்து பார்ப்பார்கள். 15 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட வீக்கம் காணப்பட்டால் நம் உடலில் எங்கோ டிபி கிருமி இருக்கிறது என்று பொருள்.

இவருக்கு ஊசி போட்ட இடத்தில் அதிகமாக வீங்கியிருந்தது.‌ கூடவே இரண்டு நாட்களுக்குக் காய்ச்சலும் இருந்தது. ரத்தப் பரிசோதனையில் ESR அளவு அதிகமாக இருந்தது. இந்த இரு அம்சங்களும் காசநோய் இருக்கலாம் என்று எங்களுக்குச் சுட்டிக் காட்டின. அதனால் உடனடியாக பொது மருத்துவரைச் சந்தித்து காசநோய்க்கான கூட்டு மருந்து சிகிச்சை எடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தினேன். ஏற்கனவே அப்போதுதான் பலமுறை அறிவுறுத்தி அவருடைய சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தோம்.

‘‘அப்ப எனக்கு கண்ணுல இரத்தக் குழாய் அடைச்சதுக்கு சுகர் காரணம் இல்லையா?” என்று கேட்டார் நாராயணன். ‘‘கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயால்தான் டிபி கிருமிகள் உடலில் புகுந்திருக்கக் கூடும். அதனால் ஏற்பட்ட பின் விளைவால் இரத்த நாளம் அடைத்துவிட்டிருக்கக் கூடும். எப்படியோ சர்க்கரையும் இதற்கு ஒரு மறைமுகக் காரணம்” என்று கூறினேன். இதே போன்ற அறிகுறிகளுடன் முன்பு இன்னொரு நோயாளி வந்திருந்தார்.

அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்கனவே ஒரு குழந்தை இருந்த நிலையில் இன்னொரு குழந்தை வேண்டும் என்று சிகிச்சை எடுத்தனர். அதில் சில விந்தணு பிரச்னைகள் இருப்பதாகத் தெரிந்தது. அப்போது பார்த்து கண் பிரச்னையும் வர, சர்க்கரை நோயும், காச நோய்க் கிருமிகளும் விந்தணு குறைபாட்டிற்கும் காரணமாக இருக்கக்கூடும் என்று ஊகிக்கப்பட்டது.

பல நேரங்களில் காச நோய்க்கான கூட்டு மருந்து சிகிச்சை எடுத்த சில நாட்களில் ஆண் பெண் இருபாலருக்கும் கண் பார்வைக் குறைபாடு, குழந்தையின்மை உள்ளிட்ட பல பிரச்னைகள் தீர்ந்து விடுவதைப் பார்த்திருக்கிறோம். எனவே, ‘‘முக்கியமான ரத்தநாளத்தின் ஒரு பகுதி அடைத்துக் கொண்டு விட்டதால் அந்தக் கண்ணில் பார்வை முழுவதும் திரும்புமா என்பது தெரியாது. ஆனால் நிச்சயம் உடலின் பிற பகுதிகளிலும் வேறு விளைவுகள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். நீங்கள் சரியான பாதையில் தான் பயணிக்கிறீர்கள்” என்று கூறி நாராயணனை ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தேன்.

மருத்துவத் துறையில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு வாசகம் இவருக்கும் பொருந்தும். ‘‘Common things are common”. ஒரு நோய்க்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் அந்த வயதில், அந்த ஊரில் அடிக்கடி பலருக்கும் வரக்கூடிய பிரச்னை தான் பெரும்பாலும் சரியான காரணமாக இருக்கும் என்பதை மனதில் வையுங்கள் என்று மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் அடிக்கடிக் கூறுவார்கள். நீண்ட நாள் இருமலுக்கு முக்கியமான காரணம் என்ன என்று கேட்டால் சில மாணவர்கள் அரிதாகக் காணப்படும் சில நோய்களின் பெயரைக் கூறுவார்கள்.

‘‘நம் நாட்டில் காசநோய் கிருமிக்குத் தான் எப்பொழுதும் முதலிடம். எங்கு பார்த்தாலும் காசநோய்க்கிருமிகள் இருக்கின்றன. அதனால் அதைத் தான் முதலில் சிந்திக்க வேண்டும்” என்பார்கள். அந்த பாலபாடம் மீண்டும் ஒருமுறை எனக்கு நாராயணன் மூலம் நினைவுபடுத்தப்பட்டு விட்டது.

ஹிட்லரை, சர்வாதிகாரிகளில் அவர்தான் முதன்மையானவர் என்று பொருள்படும்படி The great dictator என்று கூறுவார்கள். இதே போல் தான் மருத்துவ உலகில் சிஃபிலிஸ் (Syphilis) என்ற வியாதிக்கு The great masquerader/ Imitator என்ற சிறப்புப் பெயர் உண்டு. ஒரு நாடகத்தில் முகமூடி அல்லது வேடம் அணிந்து பல பாத்திரங்களை ஏற்று நடிப்பவரை Masquerader என்று சொல்வார்கள்.

அதேபோல இந்த நோயும் உடலெங்கிலும் பல்வேறு உறுப்புகளை பாதிக்கக் கூடியது. அறிகுறிகளைப் பொருத்த வரை புற்றுநோய், வைரஸ் தொற்றுகள், தன்னுடல் எதிர்ப்பு நோய்கள், வாழ்வியல் நோய்கள் இப்படிப் பலவற்றைப் போல் தோற்றம் தரக்கூடியது சிஃபிலிஸ் நோய். கண்களை எடுத்துக் கொண்டால் கண்ணின் மேற்படலம் முதல் நரம்புகள் வரை எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

சென்ற நூற்றாண்டில் சிஃபிலிஸ் நோயால் விழித்திரை நரம்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகம் இருந்ததாகத் தரவுகள் கூறுகின்றன. 1950 க்கு பின்பாக, மேம்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் மருத்துவ சிகிச்சைகளின் விளைவாக சிஃபிலிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக மாதம் ஒரு சிஃபிலிஸ் நோயாளியைச் சந்தித்த நினைவு எனக்கு இருக்கிறது. இப்பொழுது வருடத்திற்கு ஒருவரைப் பார்ப்பதே அபூர்வம். சமீப காலங்களாக சிஃபிலிஸ்க்கு பதிலாக காசநோய் சிறந்த பலமுக மன்னன் என்ற இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. எச்ஐவி நோயாளிகள், புற்றுநோய் உள்ளிட்ட காரணங்களுக்காக சிகிச்சை எடுப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு சில தொற்றுக்களால் இத்தகைய ‘பொய்த் தோற்ற விளைவுகள்’ அதிகம் காணப்படுகின்றன.

இவை மட்டுமல்லாது டைஃபாய்டு காய்ச்சலை உருவாக்கும் Salmonella உள்ளிட்ட கிருமிகள், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் சில தொற்றுகள் இவையும் அரிதாக விழித்திரையில் ரத்த நாள அடைப்புகளை ஏற்படுத்தக்கூடும். பெருந்தொற்றுக் காலத்தில் கொரோனா வைரஸ் கிருமியால் உடல் முழுவதிலும் ரத்தம் உறையும் தன்மை பலருக்கு அதிகமாக இருந்தது (hypercoagulability) . அப்போது அதிக எண்ணிக்கையில் ரத்த நாள அடைப்பால் பார்வை இழந்தோரைச் சந்திக்க நேர்ந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத, எந்த ஒரு பெரிய அறிகுறியும் இல்லாத (asymptomatic) நோயாளிகள் சிலருக்கும் கூட இத்தகைய ரத்த நாள அடைப்புகள் ஏற்பட்டன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டு ஒரு சில வாரங்களில் சிலருக்கு மாரடைப்பு, பக்கவாதம், கண்பார்வை இழப்பு போன்ற பல ரத்த நாள அடைப்பினால் உருவான வியாதிகள் தோன்றின. இதற்கு தடுப்பூசியின் பக்கவிளைவு தான் காரணம் என்று ஒரு சிலரும், இல்லை உலகெங்கிலும் பெருந்தொற்று பரவலாக இருப்பதால் அதே நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் முன்பே தாக்கியிருக்கக்கூடும், இதற்கு தடுப்பூசி காரணம் இல்லை என்று ஒரு சாராரும் வாதிட்டனர்.

கடந்த சில மாதங்களில் நான் அறிந்தவரை தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான சளி, காய்ச்சலும் அதைத் தொடர்ந்து ஒரு மாதம் வரையிலும் வறட்டு இருமலும் பலருக்கு இருந்தது. அதன் பின்னரும் இதே போன்ற ரத்த நாள அடைப்புகள் ஏற்பட்டன. அதனால் தற்போது வந்து விட்டுப் போன வைரஸ் தொற்றும் கொரோனாவுக்கு இணையானது தான் என்று பரவலாக நம்பப்படுகிறது.

அண்மையில் சந்தித்த நாராயணன் உள்ளிட்ட நோயாளிகளுக்கும் கூட இந்தக் கருத்து பொருந்தும். காசநோய் உள்ளிட்ட வேறு காரணிகள் கண்டறியப் பட்டாலும் அவர்களுக்கும் கடந்த சில வாரங்களுக்குள் என்றாவது உடல் எங்கிலும் இரத்தம் உறையும் தன்மையை அதிகரிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்பது பரவலான அனுமானமாக மருத்துவர்களிடையே நிலவுகிறது!

The post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே! appeared first on Dinakaran.

Related Stories: