சாலையை சீரமைக்க கோரிக்கை

 

ஈரோடு, மார்ச் 15: ஈரோட்டில் குண்டும் குழியுமான கேஎன்கே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகரில் முக்கிய சாலைகளில் ஒன்றாக கருங்கல்பாளையம் கேஎன்கே சாலை உள்ளது. இந்த சாலையின் இரு ஓரங்களில் வணிக நிறுவனங்கள், வியாபார கடைகள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும், இந்த சாலையின் வழியாக சேலம், நாமக்கல், சென்னை போன்ற மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்கு வந்தடைகின்றன.

இந்நிலையில், இந்த சாலையில் கருங்கல்பாளையம் சந்திப்பில் இருந்து கேஎன்கே சாலை துவங்கியதும் மூலப்பட்டரை சந்திப்பு வரை சாலையில் பல்வேறு இடங்களில் 2 மீட்டர் முதல் 4 மீட்டர் வரை ஏராளமான பள்ளங்கள் உள்ளன. மேலும், ஏற்கனவே பேட்ச் ஒர்க் பார்க்கப்பட்ட இடங்களில் அந்த சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இதனால், அவ்வழியாக செல்லும் பேருந்துகளும், கனரக வாகனம் மற்றும் இரு சக்கர வாகனம் உட்பட அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில், இந்த சாலையில் உள்ள பள்ளங்களும், குண்டு குழிகளும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட ஒரு இரு சக்கர வாகன ஓட்டி இந்த பள்ளத்தினால் கீழே விழுந்து காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஈரோடு கேஎன்கே சாலையை சீரமைத்து, புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: