பிரதமர் மோடி தலைமையிலான குழு தேர்வு புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ், சுக்பீர் சிங் நியமனம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரிக்கப்படும் நிலையில் அவசரம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு, புதிய தேர்தல் ஆணையர்களாக கேரளாவின் ஞானேஷ் குமார், பஞ்சாப்பின் சுக்பீர் சிங் சாந்து ஆகியோரை தேர்வு செய்தது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் கடந்த 9ம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ஏற்கனவே கடந்த மாதம் 14ம் தேதி பதவிக்காலம் முடிந்து அனூப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றிருந்தார். இதனால் தேர்தல் ஆணையத்தில் 2 தேர்தல் ஆணையர்கள் இல்லாமல், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மட்டும் எஞ்சியிருந்தார்.

இதைத் தொடர்ந்தும் தேதிக்குள் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையிலான தேடல் குழு 200க்கும் மேற்பட்டோர் கொண்ட தேர்வு செய்தது. அதிலிருந்து, உத்பல் குமார் சிங், பிரதீப் குமார் திரிபாதி, ஞானேஷ் குமார், இந்தேவர் பாண்டே, சுக்பீர் சிங் சாந்து, சுதிர் குமார் கங்காதர் ரகாதே ஆகிய 6 பேர் கொண்ட உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த உத்தேச பட்டியலில் இருந்து 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு நேற்று கூடியது.

இந்த தேர்வுக்குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலும் கூட்டத்தில் பங்கேற்றார். இக்குழு கேரளாவை சேர்ந்த ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாப்பை தேர்தல் சுக்பீர் சிங் சாந்து ஆகியோரை புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு அவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. உடனடியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நேற்றே புதிய ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து புதிய ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர்.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான புதிய சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும். இக்குழுவில், ஒன்றிய அமைச்சர் ஒருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்கு முன் இக்குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதி இருந்தது புதிய சட்டம் மூலம் நீக்கப்பட்டது. இந்த புதிய தேர்வு நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட உள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நேற்று அவசர அவசரமாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* யார் இவர்கள்?
ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் 1988 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள். ஒன்றிய உள்துறை அமைச்சக முன்னாள் செயலாளரான ஞானேஷ் குமார், காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை செயல்முறையை மேற்பார்வையிட்டவர். உத்தரகாண்ட் முன்னாள் தலைமைச் செயலாளரான சுக்பீர் சிங் சாந்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான திட்டத்தை மேற்பார்வையிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* சம்பிரதாய கூட்டம் ஆதிர் ரஞ்சன் காட்டம்
கூட்டத்திற்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த தேர்வுக்குழு உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்ட நடைமுறை எனக்கு பிடிக்கவில்லை. தேர்வுக்குழு கூடுவதற்கு முன்பாக அரசிடம் தேடல் குழுவின் பட்டியலை கேட்டேன். அவர்கள் குழு கூடுவதற்கு முந்தைய நாள் 212 பேரின் பெயர்களை கொடுத்தார்கள். அதில் உள்ள பலரும் பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள். ஒரே நாள் இரவில் அத்தனை பேரின் விவரங்களையும் அலசி ஆராய்வது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. பின்னர் கூட்டம் கூடுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பாகத்தான் 6 கொண்ட உத்தேச பட்டியல் தந்தனர். அந்த 6 பேர் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதற்கான விளக்கம் எதுவும் தரவில்லை. எனவே இதில் 2 பேரை தேர்வு செய்வதற்கு நான் உடன்படவில்லை. அவர்களின் நியமனத்தை எதிர்த்தேன். ஆனால் பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். நான் ஒரு சம்பிரதாயமாக மட்டுமே அழைக்கப்பட்டேன். எனவே தேர்வுக்குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். தேர்வுக்குழுவில் பெரும்பான்மை பலம் என்பது அரசுக்கு ஆதரவாக உள்ளது. அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப என்ன வேண்டுமானாலும் நடக்கும்’’ என்றார்.

The post பிரதமர் மோடி தலைமையிலான குழு தேர்வு புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ், சுக்பீர் சிங் நியமனம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரிக்கப்படும் நிலையில் அவசரம் appeared first on Dinakaran.

Related Stories: