கங்கனா ரனாவத் ஃபிட்னெஸ்

நன்றி குங்குமம் டாக்டர்

கேங்ஸ்டர் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கங்கனா ரனாவத். பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் கங்கனா, தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமான தலைவி உள்ளிட்டவற்றில் நடித்து தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். தற்போது, இந்தியில் உருவாகி வரும் இந்திராகாந்தியின் வரலாற்றுப் படமான எமர்ஜென்சி என்ற படத்திலும், தமிழில் வேட்டையன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

கங்கனா நடிகையாக மட்டுமல்லாமல், ஃபேஷன் ஐகானிக்காவும், எந்த ஒரு விஷயத்திலும் தைரியமாக தனது கருத்துக்களை முன் வைக்கும் ஆளுமைத் திறன் கொண்டவராகவும் இருந்து வருகிறார். அதே போல் அவரின் ஃபிட்னெஸ் ரகசியமும் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று. காரணம், தமிழில் நடித்த தலைவி படத்திற்காக கங்கனா தனது எடையில் 20கிலோவை கூட்டினார். ஷூட்டிங் முடிந்ததும் அந்த எடையை அப்படியே குறைத்து பேக் டூ ஃபார்ம் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்தளவிற்கு உடலை எப்போதுமே கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கங்கனா ரனாவத் தனது ஃபிட்னெஸ் மற்றும் டயட் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

ஒர்க்கவுட்ஸ்: உடலை ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வாரத்தில் 5 நாட்களாவது ஜிம்மிற்கு செல்லும் வழக்கம் உடையவள் நான். தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். அதனால்தான் உடல் எடையை கூட்டுவதாக இருந்தாலும், குறைப்பதாக இருந்தாலும் முறைப்படி செய்து ஃபிட்டாக வைத்துக் கொள்ள முடிகிறது. என்னுடைய தினசரி பயிற்சிகளில், ஓட்டப் பயிற்சி மற்றும் குத்து சண்டை பயிற்சியும் உண்டு. இதுதவிர தினமும் கார்டியோ பயிற்சிகள், டிரெட்மில்லில் விறுவிறுப்பான 15 நிமிட நடை, ஸ்டேஷனரி பைக்கில் 10 நிமிட அமர்வு அல்லது 5 நிமிட நீள்வட்ட பயிற்சி. மேலும், தினசரி யோகா பயிற்சியும் உண்டு. யோகா உடல் ஆரோக்கியத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக நினைக்கிறேன்.

டயட்: சைவ உணவுகளை மட்டுமே விரும்பி சாப்பிடுவேன். அதில், பச்சை காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் கட்டாயம் சேர்த்து கொள்வேன். எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை நான் உண்பதில்லை. சாலட் வகைகள் அதிகம் சேர்த்து கொள்வேன். இதுதவிர, கோதுமையில் செய்யப்படும் பிரெட் வகைகள், வேகவைத்த காய்கறிகளை மதிய உணவாக எடுத்துக் கொள்வேன். அதேபோல் இரவு நேரத்தில் சூப் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இடையிடையே பசிக்கும் போது புரோட்டீன் ஷேக் குடிப்பது அல்லது ஃப்ரூட் ஜூஸ் குடிப்பதும் பிடித்தமான ஒன்று.

பியூட்டி: பளிச்சென்று அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்க நான் பின்பற்றும் அழகு குறிப்புகள் இவைதான்.

CTM ரொட்டீன்: க்ளென்சிங் (cleansing), டோனிங் (toning), மாய்ஸரைஸிங் (moisturizing) என்பதே CTM ரொட்டீன் ஆகும். இது மிகவும் நம்பகமான அழகு வழக்கமாகும். அழுக்கு மற்றும் அசுத்தங்களை அகற்றுவதற்கு, முகத்தை க்ளென்சரை கொண்டு கழுவுவதன் மூலம் தொடங்கும் எளிமையான மற்றும் பயனுள்ள முறை இது.

சோப் ஃப்ரீ க்ளென்சர்: சோப்பை பயன்படுத்தும் போது அது சருமத்தில் உள்ள அனைத்து எண்ணெயையும் அகற்றிவிடுவதால் அதனை ஈடுகட்ட சருமம் அதிக எண்ணெயை வெளியிடுகிறது. எனவே முகத்தை சுத்தப்படுத்த நான் எப்போதும் சோப் ஃப்ரீ க்ளென்சரை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். அதுபோன்று, ரெகுலர் க்ளீன் அப் முறையையும் பின்பற்றி வருகிறேன். அதாவது, ஷூட்டிங் இருக்கிறதோ இல்லையோ தினசரி சருமத்தில் உள்ள அழுக்கை அகற்றி தூய்மைப்படுத்துவதை வழக்கமாகவே வைத்துள்ளேன். எவ்வளவு அசதியாக இருந்தாலும், முகத்தில் இருந்து முழுவதுமாக மேக்அப்பை கலைத்து விட்டு மட்டுமே தூங்க செல்லும் பழக்கத்தை தவறாமல் கடைபிடித்து வருகிறேன்.

மேலும், எப்போதுமே உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்வதில் மிகவும் கவனம் செலுத்துகிறேன். அதற்காக, சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதையும் மற்றும் ஃபிரெஷ் ஜூஸ்களை குடிப்பதையும் தவறவிடுவதில்லை. அதுபோன்று சருமத்தின் பொலிவுக்காக ஆப்ரிகாட்பழத்தின் எண்ணெயையும், சுத்தமான தேனையும் பயன்படுத்துகிறேன். தேன் சிறந்த பாக்டீரியா எதிர்ப்புப் பொருளாக இருப்பதால் முகப்பொலிவிற்கு பெரிதும் பயன்படுகிறது.

என்னதான் நாம் அழகுக்காக பல மெனக்கெடல்களை செய்தாலும், உடல் ஆரோக்கியமாக இருக்க, நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம். நாம் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் உணவுகளே நம் சரும ஆரோக்கியத்திலும் எதிரொலிக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவள் நான். எனவே ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே தேர்வு செய்து சாப்பிட்டு வருகிறேன். ஜங்க் ஃபுட்ஸ்களை அறவே தவிர்த்து விடுகிறேன்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post கங்கனா ரனாவத் ஃபிட்னெஸ் appeared first on Dinakaran.

Related Stories: