துறையூரில் ரூ.47.50 கோடி மதிப்பில் 2ம்கட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணி

 

துறையூர், மார்ச் 14: திருச்சி மாவட்டம் துறையூரில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை திட்டங்கள் அலகு சார்பில் துறையூர் புறவழிச் சாலை இரண்டாம் கட்ட பணிகளுக்காக ரூ. 47.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைச்சர் கே.என்.நேரு பணிகளை தொடங்கி வைத்தார்.துறையூர் புறவழிச்சாலை முதல் கட்டப் பணி துறையூர் சாலை சந்திப்பு முதல் பெரம்பலூர் சாலை சந்திப்பு வரை 3.4 கிமீ நீளத்திற்கு கடந்த 2012வருடம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து துறையூர் புறவழிச்சாலை இரண்டாம் கட்ட பணி பெரம்பலூர் சாலை சந்திப்பு முதல் ஆத்தூர் சாலை சந்திப்பு வரை சுமார் 5.2 கி.மீ நீளத்திற்கு கடந்த 2015ல் அறிவிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இப்பணிக்கான நிலமெடுப்பு பணிகள் தொடர் ஆய்வுகளின் மூலம் 2023-ம் வருடம் முடிக்கப்பட்டது. புறவழிச்சாலைக்கான கட்டுமான பணிக்கு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 5.7.2023 அன்று ரூ.47.50 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் தமிழக அரசு வழங்கியது. இப்பணிக்கான ஒப்பந்த காலம் 15 மாதங்கள் ஆகும். தற்பொழுது இந்த பணிக்கான முன் ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த புறவழிச்சாலை தார் புருவங்களுடன் கூடிய இரு வழிப்பாதை ஆகும். இதன் துவக்க நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பணிகளை பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், எம்எல்ஏ ஸ்டாலின்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், நகர் மன்ற தலைவர் செல்வராணி, துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சிவசரவணன், வீரபத்திரன், ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், துறையூர் ஒன்றியகுழு தலைவர் சரண்யா மோகன்தாஸ், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முருகானந்தம், உதவி கோட்ட பொறியாளர் மீனாட்சி, கண்காணிப்பு பொறியாளர் செல்வி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post துறையூரில் ரூ.47.50 கோடி மதிப்பில் 2ம்கட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: