போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னையில் மேலும் ஒருவர் கைது: டெல்லிக்கு அழைத்து சென்றது போதை தடுப்பு பிரிவு போலீஸ்

சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி சதானந்த் என்பவரை சென்னையில் தேசிய போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து டெல்லிக்கு அழைத்து சென்றனர்.இந்தியாவில் இருந்து உணவு பொருட்கள் என்ற பெயரில் சர்வதேச நாடுகளுக்கு உயர் ரக போதை பொருள் மூலப்பொருட்களை கடத்தியதாக கடந்த மாதம் 15ம் தேதி டெல்லியில் சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகியோரை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூலம் தான் இந்த போதை பொருட்களை கடத்தியதாக வாக்குமூலம் அளித்தனர். அதைதொடர்ந்து தேசிய போதை தடுப்பு பிரிவு போலீசார் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால் ஜாபர் சாதிக் தனது குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். தைதொடர்ந்து தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி சீல் வைத்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக்கை கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கடையே ஜாபர் சாதிக் அளித்த வாக்குமூலத்தின் படி, போதை பொருட்கள் கடத்த பல வகையில் உதவியதாக அவரது நெருங்கிய கூட்டாளியான சதா (எ)சதானந்த் என்பவரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் பதுங்கி இருந்த போது அதிரடியாக கைது
செய்தனர்.

திருச்சியை சேர்ந்த சதானந்த் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி என்று கூறப்படுகிறது. ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட பிறகு அவர் திருச்சியில் இருந்து சென்னை தேனாம்பேட்டையில் ரகசிய இடத்தில் பதுங்கி இருந்ததாகவும், வெளிநாடுகளுக்கு போதை பொருட்களை உணவு பொருட்களுடன் யாருக்கும் சந்தேகம் வராதபடி பார்சல் செய்து கொடுத்ததும் இவர் தான் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் அளித்த வாக்குமூலத்தின் படியே சதானந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சதானந்தை நேற்று அதிகாலை விமானம் மூலம் டெல்லிக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அழைத்து ெசன்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னையில் மேலும் ஒருவர் கைது: டெல்லிக்கு அழைத்து சென்றது போதை தடுப்பு பிரிவு போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: