சிஏஏ அமல்படுத்தியதற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் கடந்த 2019 டிசம்பரில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. அப்போது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் சட்டத்தின் விதிகளை வரையறுப்பதில் தாமதம் ஏற்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன. இவை தற்போதும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தின் விதிமுறைகளை வரையறுத்து, அதனை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது. லோக்சபா தேர்தல் நேரத்தில், ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற அமைப்புகளின் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன. அவை விசாரணையில் உள்ளன. சமீபத்தில் நடந்த விசாரணையின் போது கூட, ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவ்வாறான சூழலில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. எனவே ஒன்றிய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை இன்று மாலை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியுரிமை பெற தனி போர்டல்

சிஏஏ சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், இந்திய குடியுரிமை பெற தகுதியான மக்கள் விண்ணப்பம் செய்ய வசதியாக தனி போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த போர்டல் முகவரியை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, indiancitizenshiponline.nic.in. என்ற இணைய முகவரியில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ளவர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகலை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்தியாவிற்கு வெளியே இருப்பவர்கள் இந்திய தூதரகத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தணிக்கை செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post சிஏஏ அமல்படுத்தியதற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: