சமுதாயம் மாற்றம் அடைய பெரியாரை கற்றுக்கொள்ளுங்கள்: கனிமொழி எம்.பி. பேச்சு

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையடுத்து சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்கள் இணைந்து ‘அவளதிகாரம்’ என்கிற தலைப்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். முன்னதாக பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்த பெண்களின் புகைப்படக் கண்காட்சி அவர் பார்வையிட்டார்.

விழாவில் கனிமொழி பேசியதாவது : தந்தை பெரியார் சொன்னது போல, பெண்களின் கையில் இருக்கும் கரண்டியை பிடுங்கி எடுத்து விட்டு, புத்தகங்களை கையில் கொடுங்கள் என்று சொன்னது திராவிட இயக்கம்.
தந்தை பெரியார் சொன்னது போல் ஆண்மை அழிந்தால் தான் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். ஆண்மையை தான் அடக்க வேண்டும் என்று சொன்னாரே தவிர ஆண்கள் அழிய வேண்டும் என்று சொல்லவில்லை. இந்தியாவில் பெண்கள் அதிகமாக வேலை பார்க்கும் மாநிலம் தமிழ்நாட்டில் தான்.

டெல்லியில் விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலால் போராடினார்கள், அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் தவறு செய்தால், பாதுகாக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. இந்த சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்பதில் எது தடையாக வந்தாலும் அதை உடைத்தெறி என்று சொன்ன ஒரே தலைவன் தந்தை பெரியார் மட்டும் தான். பெரியாரைப் பற்றி பேசினால் சிலருக்கு பிடிக்காது ஆனால், பெரியாரை கற்றுக் கொள்ளுங்கள் இந்த சமூகம் மாற்றமடைய அவரிடம் நிறைய கருத்துக்கள் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சென்னை பல்கலைக்கழக வளாக இயக்குநர் ஆம்ஸ்ட்ராங், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post சமுதாயம் மாற்றம் அடைய பெரியாரை கற்றுக்கொள்ளுங்கள்: கனிமொழி எம்.பி. பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: