மறைமலைநகரில் மூட்டை மூட்டையாக குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்: நோய் பரவும் என பொதுமக்கள் அச்சம்

செங்கல்பட்டு: மறைமலைநகரில் மூட்டை மூட்டையாக பழைய ஏரியையொட்டி, பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சியில் 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், தமிழகம் தவிர வெளி மாநிலத்தவர் உட்பட ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், 500க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. இதுதவிர அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நகராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டுள்ள இந்த அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து மூட்டை மூட்டையாக மறைமலைநகர் மக்கானோடை சாலையில் உள்ள பழைய ஏரியையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.

இதனால், மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை ஆடு, மாடு மற்றும் பன்றிகள் கிளறிவிடுவதால் குப்பைகளிலிருந்து வரும் புழு, பூச்சி, பூரான், நண்டுவாக்கிளி போன்ற விஷ ஜந்துக்கள் சாலைகளில் உலா வருகின்றன. இதனால், சாலையில் நடந்து செல்லும் பெண்கள் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

மேலும், சுற்றுவட்டார பகுதிகளான கோவிந்தாபுரம், கொண்டமங்களம் தென்மேல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து இந்த சாலை வழியாகத்தான் வேலைக்கு சென்று வருகின்றனர். சாலையை கடக்கும்போது தூர்நாற்றம் வீசுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த கழிவுகள் ஏரியில் கலப்பதால் நீராதாரம் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

The post மறைமலைநகரில் மூட்டை மூட்டையாக குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்: நோய் பரவும் என பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: