காங்கிரஸ் 2வது பட்டியல் மத்திய தேர்தல் குழு ஆய்வு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து மத்திய தேர்தல் குழு நேற்று கூடி ஆலோசனை மேற்கொண்டது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 8ம் தேதி வெளியானது. 39 பேர் இடம் பெற்ற அந்த பட்டியலில் காங்கிரஸ்முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதோடு 9 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதில் இடம் பெற்று இருந்தார்கள். இந்தநிலையில் 2ம் கட்ட பட்டியல் குறித்து ஆலோசனை நடத்த நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு மீண்டும் கூடியது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, அதிர் ரஞ்சன் சவுத்திரி, டிஎஸ் சிங்டோ, முகமது ஜாவித் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். முதலில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளில் நிறுத்தப்பட வேண்டிய வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் உத்தரகாண்ட் காங்கிரஸ் பொறுப்பாளர் குமாரி செல்ஜா கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தார். அதை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் போட்டியிட வேண்டிய வேட்பாளர்கள் குறித்து மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தி இறுதி செய்தது. இந்த பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்று தெரிகிறது.

The post காங்கிரஸ் 2வது பட்டியல் மத்திய தேர்தல் குழு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: