சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக தொடர வாய்ப்பு!

டெல்லி : சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது. மேலும் அவர் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்து இருந்தார்.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்றம் சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை என கருத்து தெரிவித்தது. மேலும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். முன்னதாக சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் அவரது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கூறப்படுகிறது. தனது எம்.எல்.ஏ. பதவியை மீட்க தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தை பொன்முடி அணுகலாம் என்றும் நீதிமன்றத்தை நாடியும் எம்.எல்.ஏ. பதவியை பொன்முடி மீட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக தொடர வாய்ப்பு! appeared first on Dinakaran.

Related Stories: