பஞ்சாப், அரியானா உட்பட பல மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: ரயில்கள் ரத்து; நூற்றுக்கணக்கானோர் கைது

சண்டிகர்: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் அல்லாத அமைப்பு), கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய சங்கங்கள் டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கினர். தற்போது பஞ்சாப், அரியானா எல்லையான ஷம்பு உள்ளிட்ட எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள அவர்கள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி விவசாயிகளின் 4 மணி நேர ரயில் மறியல் போராட்டம் நாட்டின் பல இடங்களிலும் நடந்தது. இப்போராட்டத்திற்கு பார்தி கிசான் யூனியன், பிகேயு மற்றும் கிராந்திகாரி கிசான் யூனியன் உள்ளிட்ட விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

விவசாயிகள் முகாமிட்டுள்ள ஷம்பு எல்லையில் விவசாயிகளுடன் கிராம மக்களும் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பஞ்சாப்பில் அமிர்தசரஸ், லூதியானா, தர்ன் தாரன், ஹோசியர்பூர், பிரோஸ்பூர் உள்ளிட்ட 60 இடங்களில் ரயில் மறியல் நடந்தது. அரியானாவில் அம்பாலா, பஞ்ச்குலா, மனக்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதே போல, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தானிலும் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

தடையை மீறி ரயில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் ரயில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. பஞ்சாப்பில் 9 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. 26 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். ரயில் மறியல் போராட்டத்தை ஒட்டி, நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

The post பஞ்சாப், அரியானா உட்பட பல மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: ரயில்கள் ரத்து; நூற்றுக்கணக்கானோர் கைது appeared first on Dinakaran.

Related Stories: