ரவுடியை கொலை செய்ய திட்டம்: 2 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல்

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் புதிய காலனி பகுதியைசேர்ந்தவர் சுமன் (எ) வசந்த சுமன் (25). இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஓட்டேரியில் தன்ராஜ் என்பவரை 2020 ம் ஆண்டு கொலை செய்தார். இதற்கு பழிவாங்கும் விதமாக தன்ராஜின் கூட்டாளி போண்டாமணி, விக்கி உள்ளிட்டோர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமனை ஓட்டேரி பகுதியில் வைத்து கொலை செய்ய முயன்றபோது தப்பிவிட்டார்.

இந்த நிலையில், தன்ராஜின் கூட்டாளிகள் தன்னை கொலை செய்து விடுவார்கள் என்று நினைத்து சுமன், தன்ராஜின் கூட்டாளியான போண்டாமணியை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதுபற்றி அறிந்ததும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் நேற்றிரவு கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியில் மறைந்திருந்த சுமனை கைது செய்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 3 பட்டா கத்திகள் பறிமுதல் செய்தனர்.

பெரம்பூர் முனியப்பன் தெரு பகுதியை சேர்ந்த முருகன் (35) என்பவரிடம் கஞ்சா பொட்டலங்களை வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து முருகனை வீட்டில் வைத்து கைது செய்து அவரது வீட்டில் ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து முருகன், சுமன் ஆகியோரை ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றார்.

The post ரவுடியை கொலை செய்ய திட்டம்: 2 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: