பத்மநாபபுரம் புத்தனார் சானல் பகுதியில் தண்ணீர் இன்றி கருகும் நெற்பயிர்கள்

*விவசாயிகள் கவலை

நாகர்கோவில் : பத்மநாபபுரம் புத்தனார் சானலை நம்பியுள்ள வயல்பரப்புகளில் போதிய தண்ணீர் இல்லாததால், நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுடியின்போது தண்ணீர் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியால் அறுவடை தாமதமாக நடந்தது. பல இடங்களில் மழையில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்தனர். இதனை தொடர்ந்து கும்பப்பூ சாகுபடி பணிகள் தாமதமாக தொடங்கியது.

மாவட்டத்தில் குளத்து பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்ட பறக்கை, சுசீந்திரம், தேரூர், புத்தளம் புதுகிராமம், கடுக்கரை, தெரிசனங்கோப்பு, தாழக்குடி, இறச்சகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் அறுவடை பணி முடிந்துள்ளது. மேலும் வேம்பனூர் உள்பட பல இடங்களில் அறுவடை பணி நடந்து வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அறுவடை செய்யப்படும் வைக்கோலும் நல்ல விலைக்கு விற்பனையாகி வருகிறது. பத்மநாபபுரம் புத்தனார் சானலை பயன்படுத்தி சானலின் 21வது கிலோ மீட்டரில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடையே உள்ள பகுதியில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பத்மநாபபுரம் புத்தனார் சானலில் இருமுறை உடைப்பு ஏற்பட்டதால், சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் இருந்தது.

விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் பேரில் தண்ணீர் வழங்கப்பட்டது. வருடம் தோறும் கும்பபூ பயிர்கள் அறுவடை பணி முடிந்து, பிப்ரவரி 28ம் தேதி அணைகள் மூடப்பட்டு, சானல்கள் பராமரிப்பு பணிகள் நடக்கும். இதே போன்று இந்த வருடமும் அணை அடைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கால்வாய் உடைப்பு, அணை அடைப்பு என பல காரணங்களால் கும்பப்பூ பயிர் சாகுபடி தாமதமாக தொடங்கியதால், அறுவடை முடியும் வரை தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் நடந்த அதிகாரிகள் தரப்பு ஆலோசனை கூட்டத்தில் அறுவடை முடியும் வரை தண்ணீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து பாசன கால்வாய்களிலும் மார்ச் 15ம் தேதி வரையும், பத்மநாபபுரம் புத்தனார் சானலில் மார்ச் 20ம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால் அரசாணைப்படி பத்மநாபபுரம் புத்தனார் சானலுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் பத்மநாபபுரம் புத்தனார் சானல் மூலம் பாசன வசதி பெறும் நெற்பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளது.

45 நாட்கள் தண்ணீர் விடவில்லை

இது குறித்து பத்மநாபபுரம் புத்தனார் சானல் பாசனச்சபை தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பத்மநாபபுரம் புத்தனார் சானலை சரியாக பராமரிக்காததால் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் உடைப்பு ஏற்பட்டது. தற்காலிக பணி செய்ததால், மீண்டும் அதே இடத்தில் 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் உடைப்பு ஏற்பட்டது.

இந்த உடைப்பை சரிசெய்யும் பணி நடந்தது. இதனால் பத்மநாபபுரம் புத்தனார் சானலில் 45 நாட்கள் தண்ணீர் விடவில்லை. இதன் காரணமாக கும்பப்பூ சாகுபடி தாமதமாக நடந்தது. போதிய தண்ணீர் இல்லாததால், மாம்பழத்துறையாறு அணையில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. குளத்து பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்ட சுமார் 20 ஹெக்டேர் பரப்பிலான நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் இன்னும் அறுவடை செய்யவில்லை. தற்போதுதான் நெற்பயிரில் கதிர்கள் வர தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் கண்டிப்பாக தண்ணீர் தேவை. ஆனால் அதிகாரிகள் அரசு அறிவித்தப்படி தண்ணீர் வழங்காமல் உள்ளனர். இதன் காரணமாக நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளது.

தண்ணீர் வழங்கவில்லை என்றால் நெற்பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை உருவாகும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிவித்தப்படி பத்மநாபபுரம் புத்தனார்சானலில் வருகிற 20ம் தேதி வரை தொடர்ந்து 200 கன அடி தண்ணீர் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.

The post பத்மநாபபுரம் புத்தனார் சானல் பகுதியில் தண்ணீர் இன்றி கருகும் நெற்பயிர்கள் appeared first on Dinakaran.

Related Stories: